பாரீஸ்: ஸ்பெயினிலிருந்து 142 பயணிகள் மற்றும் 6 விமான நிறுவன ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ஏ320 ஏர்பஸ் விமானம், பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 148 பேரும் உயிரிழந்தனர். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப் நகருக்கு இந்த விமானம் கிளம்பியது. பிரான்ஸ் நாட்டில் அது ஆல்ப்ஸ் மலைத் தொடரின் தென் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தபோது, Alpes de Hautes Provence என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. நைஸ் நகருக்கு 100 மைல் தொலைவில் விமானம் விழுந்துள்ளது.
ஆல்ப்ஸ் மலையானது மொராக்கோ முதல் ஸ்லோவேனியா வரை பரந்து விரிந்துள்ள பெரிய மலைத் தொடராகும். இதில் பிரான்சிஸ் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில்தான் விமானம் விழுந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் பிரபலமான லூப்தான்ஸா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 4யு 9525 என்ற விமானமாகும். இந்த விமான நிறுவனம் நம்ம ஊர் ஸ்பைஸ்ஜெட் போல குறைந்த கட்டண விமானமாகும்.
பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்ட் விமான விபத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், விபத்தில் சிக்கிய யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. விபத்து நடந்த இடத்தை அடைவதும் கடினமானது என்றார். அந்த விமானத்தில் 174 பேர் வரை பயணிக்க முடியும். இருப்பினும் விபத்தில் சிக்கிய விமானத்தில் 142 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்துள்ளனர். விமானம் பார்சிலோனாவிலிருந்து கிளம்பிய 80 நிமிடங்களில் ரேடாரின் கண்ணிலிருந்து தப்பியுள்ளது. அதன் பின்னர் அது என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அது ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த பயணிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸ்னூவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறல்கள் அருகில் உள்ள பார்சலோனெட் என்ற கிராமத்தில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் தெரியவி்ல்லை. ஏற்கனவே சர்வதேச அளவில் நடைபெற்ற மூன்று பெரிய விமான விபத்துக்களின் வடுக்கள் கூட ஆறாத நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த விமான விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
No comments:
Post a Comment