Latest News

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!


பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன. இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: மூலபத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.

23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்….

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.
* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.
இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

‘அ’ பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision) ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர் நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். நன்றி http://patta-chitta.blogspot.in/2013_07_01_archive.html பட்டாவில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி

பட்டாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்க

சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல்

சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு செய்தல் ஆகியவற்றிற்கும் கட்டணம் மனு ஆகியவை பெறப்படும் அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்
அதன் அடிபடையில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் பட்டா மாறுதல் மட்டும் செய்யப்படுவதில்லை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.