திருப்பூர்: குடிபோதையில் நாகப்பாம்புடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது, பாம்பு கடித்ததில் புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல, பணிக்கு சென்று திரும்பிய சந்திரகுமார், இரவில் மது குடித்து விட்டு காற்றுக்காக வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் தனது உடலில் ஏதோ ஊர்வதை உணர்ந்த சந்திரகுமார், திடுக்கிட்டு விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அவர் மீது நாகப்பாம்பு ஒரு படமெடுத்தபடி நின்றுள்ளது.
போதையில் இருந்த சந்திரகுமார், பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் அதனைத் தனது கையால் பிடித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார். பின்னர் அதனை, ‘எனது வீர தீர செயலைப் பாருங்கள்' என்ற வாசகத்துடன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதற்கிடையே சந்திரகுமாரின் கையில் இருந்த பாம்பு அவரைக் கடித்து விட்டது. இதனால், உடல் முழுவதும் விஷம் பரவ, வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்திரகுமார் மயங்கினார். அதிகாலையில், வீட்டை விட்டு வெளியே வந்த செல்வி, தனது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தா, சந்திரகுமாரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். உலகையே ஆட்டிப் படைத்து வரும் செல்ஃபி மோகம், தற்போது தாராபுரத்தில் ஒரு புதுமாப்பிள்ளையின் உயிரையே பறித்திருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment