சென்னை மருத்துவ முகாம் நடத்தி 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை செய்து அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த மருத்துவ முகாம்களில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முகாம்களிலும் 16000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரத்தில் கடந்த 6-ந்தேதி அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் மட்டும் 2,037 பெண்கள் பங்கு கொண்டு மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொண்டனர். இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் ஒரே இடத்தில் 971 மகளிர் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டதாகக் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது. இந்த உலக சாதனை நிகழ்வினையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், ஜெயலலிதாவுக்கு கின்னஸ் வேல்டு ரெகார்டு லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் லூசியா சினிகாக்லிசி வழங்கினார். புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை, இன்று கழகப் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சார்பாக, கழக மகளிர் அணிச் செயலாளர் சசிகலா புஷ்பா, எம்.பி., பெற்றுக் கொண்டார். அப்போது மகளிருக்கென தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களை லூசியா சினிகாக்லிசி வெகுவாக பாராட்டினார்.
குறிப்பாக மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்களுக்கு பயன்பட்டிருப்பது உலக சாதனை மட்டுமல்ல தமிழகத்திலிருந்து உலகிற்கு சொல்லப்படும் செய்தியும் ஆகும். இது போன்ற மருத்துவ முகாம்கள் உலக அளவில் நடைபெறும் அவசியம் நிரம்ப உள்ளது என்றும் லூசியா சினிகாக்லிசி குறிப்பிட்டார். புரட்சித் தலைவி யாரும் செய்திராத சாதனைகளை தொடர்ந்து செய்து வருவதை நன்றியோடு பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பழனியப்பன், வளர்மதி, கோகுல இந்திரா, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment