தினமும் செய்தித் தாள்களை புரட்டினால் விபத்து குறித்த விவரம் இல்லாமல் இருக்காது. விபத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் நிலைமை பரிதாபம். அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. விபத்து என்ற அரக்கனை விரட்ட அரசு தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையாததால் தமிழகத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை
கடந்த 14ஆம் தேதி தமிழக முதன்மை செயலாளராக இருந்த சாந்தினி கபூர் பயணித்த கார், கிருஷ்ணகிரியில் விபத்துக்குள்ளாகி அவர் பலியாகினார். இந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கடந்த 20ஆம் தேதி ஒகேனக்கலில் நடந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர். அன்றைய தினம் சென்னை பாடி மேம்பாலத்தில் லாரி மோதி 4 பேர் பலியாகினர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக தமிழக அரசு, 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் சென்னையில் நடந்த 26வது சாலை பாதுகாப்பு வார விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதில் 2014-15ஆம் ஆண்டுக்கு மட்டும் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாலங்கள், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சர்வதேச தரத்தில் ஓட்டுநர்களின் தரத்தை மேம்படுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 15 கோடி ரூபாயில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.
விபத்தை தவிர்க்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்கு அரசு, வாகன ஒட்டிகள் என இருதரப்பிலும் தவறுகள் இருக்கின்றன.
சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தவர்கள் குறித்த விவரங்களை தமிழக காவல் துறையின் இணையதளத்தை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. அதாவது, கடந்த 1986ஆம் ஆண்டு 4955 பேரும், 1987ல் 5264ம், 1988ல் 5791ம், 1989ல் 6279ம்,1990ல் 6663ம், 1991ல் 6406ம், 1992ல் 7073ம், 1993 7349ம், 1994ல் 7798ம், 1995ல் 8773ம், 1996ல் 9028ம், 1997 8755ம், 1998ல் 9801ம், 1999ல் 9653ம், 2000ல் 9300ம், 2001ல் 9571ம், 2002ல் 9939ம், 2003ல் 9275ம், 2004ல் 9507ம், 2005ல் 9758ம், 2006ல் 11,009ம், 2007 12,036ம், 2008ல் 12,784ம், 2009ல் 13746ம், 2010ல் 15,409ம், 2011ல் 15,422ம், 2012ல் 16,175ம், 2013ல் 15,563ம் 2014ல் செப்டம்பர் வரை 11,666 பேரும் விபத்தில் பலியாகி உள்ளனர்.
1986ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை விபத்தில் பலியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2012ல் தமிழகத்தில் மொத்தம் 67,757 விபத்துக்கள் நடந்துள்ளன. 2013ல் 66,238 விபத்துக்களும், 2014 செப்டம்பர் வரை 51,136 விபத்துக்களும் நடந்துள்ளதாக காவல்துறை புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தும் அரசு அதிகாரிகள் அதைக் கண்டுக்கொள்வதில்லை என்று குற்றம் சுமத்துகிறார் நாகர்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் பரமசந்திரன். அவரிடம் பேசினோம். “விபத்துக்களை தவிர்க்க அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
இதில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி நடந்த விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இந்த வழக்கில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. போக்குவரத்து விதிகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன.
குறிப்பாக வாகனங்களின் முகப்பு விளக்கில் கறுப்பு பட்டை ஒட்டப்பட வேண்டும். ஆனால் இந்த கறுப்பு பட்டை காவல்துறை, அரசு துறையில் எத்தனை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன? இதையெல்லாம் சுட்டிக்காட்டி விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர உள்ளேன்” என்றார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கடந்த இரண்டு ஆண்டுகளாக விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வே காரணம். இருப்பினும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிகளை மதித்தால் நிச்சயம் விபத்தை தவிர்க்கலாம்” என்றனர்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, “ஜனத்தொகை அதிகமாகி விட்டதால் விபத்துக்களும் சர்வசாதாரணமாகி விட்டது. தரமான சாலைகள் இல்லை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க முடியும்” என்றார்.
அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “இன்றையக் காலக்கட்டத்தில் 75 சதவிகிதம் சரக்கு போக்குவரத்தும், 25 சதவிகிதம் பயணிகள் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் சரக்கு போக்குவரத்து வாகனங்களால் நடக்கின்றன. இதை தவிர்க்க நீர்வழிப் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பொது (அரசு பஸ்) போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தினால் விபத்தையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம்” என்றார்.
விவேகம் விபத்தை தவிர்க்கும்!
No comments:
Post a Comment