காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால், போதிய ஆர்டர்கள் இல்லை எனக் கூறி, தொழிற்சாலையை கடந்த நவம்பர் 24-ம் தேதி பாக்ஸ்கான் நிர்வாகம் மூடியது. இதனால், தொழிற்சாலையில் பணிபுரிந்த பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.ஆலையை மூடக் கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியதால், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை மூடும் முடிவை தொடர்ந்து வலியுறுத்தியதுடன் தொழிற்சாலையும் வரும் 10-ந் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் ஏற்கனவே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், மீதமுள்ள 1306 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, ஸ்டாண்டர்ட் சம்பளம், லம்சம் தொகை ரூ 50,000, பணி மூப்புத்தொகை, 3 மாத நோட்டீஸ் பீரியட் பே, 2014-ம் ஆண்டிற்கான சட்டப்படியான போனஸ் தொகை ரூ.8,300 ஆகியவற்றை வழங்க தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பாக்ஸ்கான் தொழிலாளர்கள் வரும் 9-ம் தேதி தொழிற்சாலை வளாகத்தினுள் உள்ள மனிதவள மேலாளரை நேரில் அணுகி இழப்பீட்டுதொகை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தவறும் பட்சத்தில் சட்டப்படியான இழப்பீட்டு தொகை மட்டும் வரும் 10-ந்தேதி அவரவர் வங்கிக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்படுமென்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment