டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் யாருக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பதுதான் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளின் முன் நிற்கும் கேள்வி. தேர்தல் முடிவு தெரிய 10ம் தேதிவரை காத்திருக்க வேண்டும் என்பதால் தூக்கம் தொலைத்து நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா டெல்லி வந்தபோது, ''நான் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறேன்'' என்றார் பிரதமர் மோடி. அவருடைய தூக்கத்தைக் கெடுத்தது கூட டெல்லி தேர்தல்தான்!
வாக்குப்பதிவு
கடுங்குளிர் என்பதால் இன்று காலையில் சற்றே மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்லச் செல்ல விறுவிறுப்படைந்தது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்குத்தான் செம கஷ்டம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏனெனில் காங்கிரஸ் இந்த முறை போட்டியிலேயே இல்லை. கடந்த முறை காங்கிரஸ் கட்சியை அடித்து துவைத்து காயப்போட்ட ஆம் ஆத்மி கட்சி இம்முறை குறிவைத்தது பாஜவைத்தான்.
செம போட்டி செம லூட்டி ரேடியோ,
ஆட்டோ, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் என்று பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் நேரடியாகவே மோதின. பிரசாரத்தில் கலை நிகழ்ச்சிகள் பாட்டு, டான்ஸ் என்று எல்லாவற்றிலும் போட்டி. கெஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடவே, அவரை சமாளிக்க அவரோடு அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடியை திடீரென கூட்டி வந்து நிறுத்தியது பாஜக. ஆனாலும் கெஜ்ரிவால் பாஜகவிற்கு பயங்கர நெருக்கடியைத்தான் கொடுத்துள்ளார்.
மானப் பிரச்சினை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலுள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றிக் கொடியை நாட்டியது. அதே போல அடுத்தடுத்து நடந்த மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது. காஷ்மீரிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியைப் பெற்றது. கடும் இழுபறியால் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்கிக் காட்டியது பாஜக. ஆனால், இப்போது நாட்டின் தலைநகர் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சறுக்கினால் அது பிரதமரான மோடிக்கு முதல் சறுக்கலாக அமையும்.
ஜெயித்தே ஆகவேண்டும்
தலைநகரில் ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, உள்துறை அமைச்சர், டெல்லி ஆளுநர் ஆகியோருக்கு அடுத்து இருக்கும் டெல்லி முதல்வர் பதவியில் தங்களை எதிர்க்கும் நபர் அமர்வதா, பாஜக ஜெயித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் பிரதமர் மோடி. அதே போல அவரது தளபதியும் பல தேர்தல்களை வென்று காட்டியவருமான பாஜக தலைவர் அமித் ஷாவும் இந்தத் தேர்தலில் தீவிர பிரச்சார யுக்தியை வகுத்து போராடினார். நாடு முழுவதும் இருந்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஓட்டு கிடைத்திருக்குமா?
டெல்லி சட்டசபையில் மொத்தம் உள்ள 70 இடங்களில் கடந்த முறை 28 இடங்களில் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளை பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பங்கு போட்டனர். இந்த முறை அந்த வாக்குகள் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கா அல்லது ஆம் ஆத்மிக்கு போயிருக்குமா என்பதுதான் கேள்வி. டெல்லியின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ? தெரியவில்லை. கருத்து கணிப்பு முடிவுகளும் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பாஜகவிற்கு.
மாறிய கணிப்புகள்
ஜனவரி தொடக்கத்தில் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் வந்தன. ஆனால், பிப்ரவரி தொடங்கியவுடன் வந்த கருத்துக் கணிப்புக்களில் எல்லாம் மாறிவிட்டன. மாறி, மாறி வந்த கருத்துக் கணிப்புகளின்படி பாஜக, ஆம் ஆத்மி இரண்டும் சம நிலையில் இருப்பதாகவே தெரிய வந்தது.
தோல்வி பயமா?
பிரசார உத்தி, மீடியாவை பயன்படுத்துவது ஆகியவற்றில் பாஜகவைப் போலவே கெஜ்ரிவால் கலந்து கட்டி அடித்தார். 'தேர்தலில் தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள்' என்ற கேள்விக்கு, 'நான் கேம்பிரிட்ஜ் செல்வேன்' என்று கிரண் பேடி கூற அதிர்ச்சியடைந்துள்ளது பாஜக. இப்போதே தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல பேட்டி தருவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும் 'மோடிக்கும் டெல்லி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை' என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியதும், பாஜகவின் பயத்தைக் காட்டியது.
நம்பிக்கைதான் பாஸ்
ஆனாலும் வாக்குப் பதிவு நாளன்று வாக்குகளை பதிவு செய்த வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் சற்றே நம்பிக்கையுடனே பேசியுள்ளனர். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கையோடு கூறியுள்ளார். சுப்ரமணிய சுவாமியோ ஒருபடி மேலே போய் அடுத்த முதல்வர் கிரண்பேடி என்றே டுவிட்டரில் போட்டுவிட்டார்.
No comments:
Post a Comment