டெல்லி: கிட்டத்தட்ட டெல்லி சட்டசபைத் தேர்தல் பெரிய வரலாற்று சாதனையாக மாறியுள்ளது. ஒரு உலக அதிசயம் நடந்தது போலத் தெரிகிறது புள்ளி விவரங்களைப் பார்த்தால். பல கோணங்களிலும் டெல்லி தேர்தல் ஆச்சரியங்கள் நிரம்பிய ஒன்றாக உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மிக்கும் கூட நிறைய பாடங்களை மக்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள். இதில் உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட தொகுதிகள் 10 உள்ளன. அதேபோல நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள் 28 ஆகும். ஏழைகள், நலிவடைந்த மக்கள் அதிகம உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 32 ஆகும். இந்த மூன்றிலுமே முத்திரை பதித்துள்ளது ஆம் ஆத்மி. இது முதல் ஆச்சரியம். அதாவது உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட 10 தொகுதிகளையும் இக்கட்சி அப்படியே அள்ளியுள்ளது. இங்கு பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இது பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாகும். நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி. மீதமுள்ள 3 இடங்களை பாஜக வென்றுள்ளது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் ஆணித்தரமாக ஆம் ஆத்மி பின்னால் அணிவகுத்திருப்பதை உணர முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், ஏழைகள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முத்திரை பதித்துள்ளது. இங்குள்ள 32 தொகுதிகளில் 29 தொகுதிகளை அக்கட்சி தட்டிப் பறித்துள்ளது. இந்த தொகுதிகள்தான் ஆம் ஆத்மியின் முக்கியமான பலமாகவும் காணப்படுகிறது. இன்னும் துல்லியமாக உற்றுப் பார்த்தோமானால் தலித் மக்கள், வர்த்தக சமூகத்தினர், முஸ்லீம்கள், உயர் ஜாதியினர், டெல்லியில் பலம் வாய்ந்த பஞ்சாபியர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என சகல தரப்பினரும் சரமாரியாக ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆதரவு கிடைத்துள்ளது ஆம் ஆத்மிக்கு. பாஜகவையும், காங்கிரஸையும் ஒட்டுமொத்த டெல்லியும் கைவிட்டு விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பெரும் வெற்றியைப் பெற்றது பாஜக. ஆனால் இந்த முறை நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது பாஜக. மோடி சுனாமி என்று கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அனைவரும் வர்ணித்தனர். ஆனால் அந்த மோடி சுனாமியை விட படு வேகமாக வந்து பாஜகவை சுழற்றியடித்து விட்டது இந்த ஆம் ஆத்மி சுனாமி. கிட்டத்தட்ட மோடி ஸ்டைலில் டெல்லியில் வென்றுள்ளார் கெஜ்ரிவால். தமிழகத்தைப் போல கடந்த லோக்சபா தேர்தலில் இப்படித்தான் தமிழகத்தில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அது அனாயசமாக கைப்பற்றியது. அனைத்துத் தரப்பு மக்களும் அதிரடியாக அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்தனர். பாஜக கூட்டணிக்கு அந்தத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதிலும் ஒரு இடம்தான் பாஜகவுக்குக் கிடைத்தது. இன்னொரு இடம் பாமகவுக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட அதே போல இந்த முறையும் அனைத்துத் தரப்பினரின் பேராதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியைக் கைப்பற்றியுள்ளது.
Sent from Samsung Mobile
No comments:
Post a Comment