ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.ஆனந்த்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டையில் பேசிய அவர்,
வழக்கமாக மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவர் பதவி விலகினாலோ அல்லது உயிரிழந்தாலோதான் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வாடிக்கை. ஆனால் இந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்திருக்கக் கூடிய தேர்தல் ஒரு விபத்தின் காரணமாக அல்லது ஒரு மறைவின் காரணமாக அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக வந்திருக்கக் கூடிய தேர்தல் இந்த இடைத்தேர்தல் அல்ல. பிறகு எதற்காக இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்று கேட்டால், ஊழல் வழக்கில் ஒருவர் சிக்கிய காரணத்தால், தண்டனை பெற்ற காரணத்தால், 4 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற காரணத்தால், 100 கோடி ரூபாய் அபராதம் போடப்பட்டிருக்கக் கூடிய காரணத்தால், அவருடைய பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. பதவியும் பறிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால், இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம், சூழல், நிலை இந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் இருக்கும் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அமைதத்தான் நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க அவர்கள் முடிவு செய்து, அந்த 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு, ஆனால் வாக்காளர்களிடத்திலே வந்து சேர்ந்தது 2 ஆயிரம் ரூபாய் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆக ஓட்டுக்கு பணம் கொடுப்பதிலேயும் ஊழல் செய்திருக்கிறார்கள். இதுதான் இதில் வேடிக்கை.
ஆக இன்றைக்கு பினாமியாக இருக்கின்ற ஒரு முதல் அமைச்சர், தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதிக்கும் வரவில்லை. முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எந்த தொகுதிக்கும் அவர் செல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் திடீரென்று அவர் திருச்சிக்கு வந்திருக்கிறார். ஆக முதல் அமைச்சராக வந்த அந்த பினாமி ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு அதிமுக அமைச்சர்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை, அதிமுக நிர்வாகிகளையெல்லாம் அந்த ஓட்டலுக்கு அழைத்து விவாதித்து அங்கே ஒரு திட்டமிட்டு, சதி செய்து, அதற்கு பிறகு எதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.
ஆக ஒரு முதல் அமைச்சரே நேரடியாக வந்து, தனியார் ஓட்டலில் வந்து தங்கி, எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் கிடையாது. தொகுதிக்கும் வரவில்லை. பிரச்சாரத்திற்கும் வரவில்லை. ஆனால் இந்த தேர்தலுக்காக அவர் ஒரு தனியார் ஓட்டலில் வந்து தங்கி, கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். ஆக அதுதான் நேற்று இரவு, இன்று விடியற்காலையிலே அவகைள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆக கொடுத்தது 5 ஆயிரம், ஆனால் கொடுத்திருப்பதோ 2 ஆயிரம். இதுதான் இன்றைக்கு அதிமுகவின் நிலை.
ஆக ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்கக்கூடிய ஒரு முதல் அமைச்சராக இன்றைக்கு ஓ.பி அவர்கள் இருக்கிறார் என்பதை பட்டு பகிரங்கமாக நான் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே நியாயமாக அவர் மீது வழக்குப் போட வேண்டும். வழக்குப்போடுவது மட்டுமல்ல அவரை கைது செய்ய வேண்டும். அல்லது நான் சொல்வதிலே ஏதாவது தவறுகள் இருக்கிறது என்று சொன்னால், தெம்பிருந்தால், தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள். என்னை கைது செய்யுங்கள். நான் அதற்கு கவலைப்படவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment