"கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்சியுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்படப் போவதாக" முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சில தினங்களுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது "இன்னொருவரும் தன் வாரிசுடன் வெளியேறினால் காங்கிரஸுக்கு விமோசனம் கிடைக்கும்" என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ப.சிதம்பரத்தை தான் அவர் இவ்வாறு கூறியதாக கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, 20-க்கும் அதிகமான ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் "ஒற்றுமையுடன் கட்சிப் பணியாற்றுவோம்" என உறுதி அளித்து கையொப்பமிட்ட அறிக்கையை கார்த்தி சிதம்பரம் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கட்சியில் நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை தங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்ததாகவும், அவர் வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் தலைமை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள செயல், தற்போது ஆறுதல் அளிப்பதாக உள்ளது" என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், "காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயல்பட போவதாகவும், கட்சியின் வளர்ச்சிக்காக தங்களுடைய முழு உழைப்பையும், பங்களிப்பையும் தர தயாராக உள்ளதாகவும்" அதில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment