ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழக முன்னாள் முதல்வரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் வளர்மதி, தி.மு.க.வின் ஆனந்த், பாரதிய ஜனதாவின் சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. சாந்தபுரம் வாக்குச் சாவடியில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் காலையிலே தமது வாக்கைப் பதிவு செய்தார். இத்தேர்தலில் முதன்முறையாக வாக்காளர் வாக்கைப் பதிவு செய்தவுடன் தேர்தல் அதிகாரிக்கு தகவல் செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையடக்க கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை 6 மணிவரையில் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் வருகின்ற 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவானது வெப் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பதற்றம் நிறைந்த 79 வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு
வாக்குப் பதிவு தொடங்கிய போது ஓலையூர், அதவத்தூர் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த சாவடிகளில் வாக்குப் பதிவு சற்று தாமதமானது. சுமார் 45 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின்னர் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment