Latest News

  

சுதந்திர போராட்டத்தில் ஹிஜாபுடன் களமிறங்கிய வீர மங்கை............

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி  வ  பரக்காத்தஹு...

இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீர பெண்மணி பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப்போகிறோம். 

அப்பெண்மணி வேறு யாரும் இல்லை, இந்திய சுதந்திர வேங்கை வீர சகோதரான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி, இவ்விரு வீரர்களை பெற்ற அன்னை தான் ஆபாதி பானு சாஹிபா என்ற “பீ அம்மா” அல்லது பீ அம்மன்” என்று அழைக்கப்படுகிறார்கள்.

 பிறப்பு:

இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்ற ஊரில் 1857-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் தர்வேஷ் கான் என்பவருக்கு செல்வ புதல்வியாக பிறந்தார்கள். அன்றைய முஸ்லிம் பெண்களை போன்றே இவர்களால் எவ்வித கல்வி படிப்பையும்  படிக்க முடியவில்லை. 

 திருமணமும் விதவை வாழ்வும்:

 முஸ்லிம்களின் இஸ்லாமிய நெறிமுறை படி வாழ்ந்த பீ அம்மா, மற்ற பெண்மணிகளை போல் இவர்களும் அப்துல் அலி என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை துவங்கினார்கள். இவர்களின் கணவர் ராம்பூர் பகுதியின் ஆங்கில அரசின் உயர் அதிகாரியாக இருந்தார்கள். அப்துல் அலி காலரா நோயினால் 1907-ம் ஆண்டு மரணம் அடைந்தார், அவர் இறக்கும் நேரத்தில் முப்பது ஆயிரம் கடன் வைத்திருந்தார். அப்போது அவருக்கு வயது முப்பது, அன்னை பீ அம்மாவிற்கு இருபத்தியேழு வயது. பீ அம்மா தனது 27-ம் வயதிலேயே தன் கணவரின் இறப்பால் விதவை ஆகினார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தன. கணவன் இழந்த விதவை வாழ்வு ஒரு பக்கம், சின்ன சிறு ஆறு பிள்ளைகள் மறுப்பக்கம். பீ அம்மா மனம் தளராமல் தன் கணவனின் கடனை அடைத்ததோடு குடும்ப வாழ்விலும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் அழியாத தன் பெயரை பதித்து விட்டே சென்றார்கள். இவர்களின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு இஸ்லாமிய பெண்கள் அறிய வேண்டியது அவசியம். இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் ஹிஜாப் என்ற இஸ்லாமிய பர்தாவை அணிந்தே ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் தந்தார்கள். அன்னை அவர்களுக்கு எவ்வித கல்வியறிவு இல்லை என்றாலும் தன் பிள்ளைகளை ஆங்கிலத்திலும், உருதுவிலும் புலமை பெற்றவர்களாக ஆக்கினார்கள். 



 அலி சகோதரர்கள்:

 இந்திய சுதந்திர போராளிகளில் அலி சகோதர்களான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி இவ்விருவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த புதல்வர்களை பெற்றவர் தான் இந்த அன்னை. தன் முப்பது வயதிலேயே கணவனை இழந்த இப்பெண்மணியின் பிள்ளைகளுக்கு வயது எத்தனை இருக்கும், யோசித்து பார்த்தால் விளங்கும் சின்ன சிறு பிள்ளைகளாகவே இருந்திருப்பார்கள், அனைத்து குழந்தைகளும் பள்ளி பருவத்திலேயே இருந்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிறு பிள்ளைகளை கல்வி அறிவு இல்லாத ஒரு இஸ்லாமிய பெண்மணி, அதுவும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் நிலைமைகளை பாருங்கள். எப்படி இருந்திருக்கும்?. இஸ்லாமிய மங்கை இந்நூற்றாண்டில் இப்படியல்லாம் வாழ முடியும் என்பதை தன் செயல்களில் காட்டிய இந்த வீர அன்னை, தான் இருந்த நிலைமைகளை எதுவும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

இந்த அன்னை தன் பிள்ளைகளை தேவ்பந்த், அலிகார் பல்கலை கழகத்திற்கு படிக்க அனுப்பியது மட்டுமில்லாமல் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்திற்கும் அனுப்பி அவர்களை ஆங்கிலத்திலும் உருதுவிலும் வல்லுனர்களாக ஆக்கினார்கள். அது மட்டும் இல்லாமல் இந்திய சுதந்திர போராட்டங்களில் அவர்களை ஈடுபட செய்து “அலி சகோதர்கள்” என்ற பெயரை இந்திய வரலாற்றில் பதிக்க காரணமாக இருந்தது அன்னை பீ அம்மா தான். முஹம்மது அலி அலிகார் பல்கலை கழக முன்னேற்றத்திலும், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை கழகம்(1920) உருவாக்குவதில் முக்கியமாக செயலாற்றியவர். இவர் தன் சகோதர் சௌகத் அலி அவர்களுடன் இணைந்து ஹம்டார்ட் (HAMDARD) என்ற உருது வார இதழும், தி கமராட் (THE COMRADE) என்ற ஆங்கில வார இதழும் நடத்தினார்கள். அதில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துகளை வழங்கி சுதந்திர ஆர்வத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பினார்கள். பீ அம்மாவின் மகனான முஹம்மத் அலி 1906-ம் ஆண்டு டாக்காவில் நடந்த இந்திய முஸ்லிம் லீக் துவக்க விழாவில் பங்குகொண்டு, 1918-ம் ஆண்டு அதன் அகில இந்திய தலைவராக பணியாற்றினார். அலி சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்திஜி உடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றார்கள். கிலபாத் இயக்க போராட்டம், காந்திஜியின் ஒத்துழையாமை போராட்டம் என அனைத்திலும் பங்கு கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அலி சகோதரார்கள் போராடினார்கள், அதனால் பல முறை ஆங்கிலேயர்களின் சிறைசாலைக்கு சென்றார்கள். சுதந்திர இந்தியாவிற்காக அலி சகோதரர்கள் இத்தனை உழைத்து இருப்பார்களானால், அவர்களின் முழு உந்துதலுக்கும்,  மகனின் வீர தேசபற்றுக்கு காரணம் அன்னை பீ அம்மாவின் முழு உழைப்பே ஆகும்.

முதலாம் உலகப்போர் நடந்துக்கொண்டு இருந்த சமயத்தில் அன்னையின் மகன் முஹம்மது அலி அவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள், அச்சமயம் முஹம்மது அலி அவர்களுடன் அன்னை பீ அம்மா அவர்களும் சிறையில் இருந்தார்கள். டிசம்பர் 1921-ம் ஆண்டு அலி சகோதரர் (முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி)களை பிரிட்டிஷ் ஆங்கில இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது பொது மன்னிப்பின் பேரில் முஹம்மத் அலி விடுதலை செய்யப்படுகிறார் என்ற செய்தி அன்னை பீ அம்மா அவர்களின் செவிக்கு எட்டியது. அதை கேட்ட அன்னை, என் மகன் முஹம்மத் அலி இஸ்லாத்தின் மகன், பிரிட்டிஷ் போடும் மன்னிப்பு பிச்சையை அவன் எதிர்ப்பார்க்க மாட்டான். அப்படி அவன் செய்து இருந்தால், என் இந்த வயதான கை போதும் அவனுக்கு எதிராக போராடும் என வீர முழக்கம் முழங்கினார்கள். 

அன்னையின் அரசியல் வாழ்வு:

தன் புதல்வர்களை நாட்டுக்காக தியாகம் செய்தது இல்லாமல், தானே நேரடியாக அரசியலில் ஈடுப்பட்டார்கள். சுதந்திர பாரதத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இவர்கள் சுதந்திர போராட்ட இயக்கத்திற்கும், பெண்களுக்கும் மத்தியில் இணைப்பு பாலமாக இருந்து சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். 1917-ம் ஆண்டு முதல் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் அரசியல் மேடைகளில் மற்ற பெண்களுக்கு முன் அன்னை பீ அம்மா இஸ்லாமிய பர்தா ஹிஜாப் அணிந்து மேடையில் அமர்ந்து, மக்களுக்கு தேசப்பற்றை மூட்டினார்கள். ஒரு தடவை அன்னை பீ அம்மா அவர்கள் பஞ்சாப் பகுதியில் நடந்த ஒரு அரசியல் விழாவில் முகமூடி உள்ள ஹிஜாப் உடன் மேடையில் தோன்றி, மக்களுக்கு முன் உரையாற்றுவதற்கு முன் தன் முகமூடியை அகற்றி ஹிஜாபுடன் வீர முழக்கம் செய்தார்கள். இந்திய வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விடுதலை போராட்டம் செய்த இஸ்லாமிய பெண்மணிகளில் அன்னை பீ அம்மா தான் முதன்மையானவர்கள். செப்டம்பர் 1917-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகள் மௌலானா முஹம்மது அலி அவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய வந்தார்கள், அதாவது உலகப்போர் நடக்கும் தருணத்தில் நாங்கள் உலகப்போரில் ஆங்கிலேய மன்னருக்கு எதிராக பங்கு கொள்ள மாட்டோம் என்ற ரீதியில் ஒப்பந்தம் இருந்தது. அப்போது அன்னை பீ அம்மா அவர்கள் திரைமறைவில் இருந்தார்கள், தன் மகனும் பிரதிநிதிகளும் பேசுவதை செவிமடுத்த அன்னை உடனே ஒரு பெண் சிங்கத்தை போன்று திரையில் இருந்து வெளிவந்து தன் மகனிடம் “நீ மட்டும் இதில் கையொப்பமிட்டால், என் முதிர்ந்த கைகள் உனக்கு எதிராக போராடும்” என கர்ஜித்தார்கள். டிசம்பர் 30, 1921-ம் ஆண்டு அஹ்மதாபாத்தில் நடந்த அகில இந்திய பெண்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பெண்களுக்கு மத்தியில் பேசும் போது, நம் நாடு விடுதலை அடையும் வரை சந்தோசங்களும் ஆடம்பரங்களும் நம் வாழ்வில் இருக்கக்கூடாது என்ற உரையாற்றினார்கள். அந்த மாநாட்டில் அன்னை பீ அம்மா உடன் கஸ்தூரிபாய் காந்தி, சரோஜினி நாயிடு, அனுசுயா பேன், அம்ஜாதி பேகம் போன்ற பெண்மணிகள் இருந்தார்கள். கதர் ஆடைகளை அணிவதிலும், அதையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பீ அம்மா விரும்பினார்கள். இவர்களின் மேடை பேச்சில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஆங்கிலேயர்களை வெளியேற்றுதல், கதர் ஆடை அணிகலன்களை அணிதல் போன்ற கருத்துகளே இருந்தன. ஆங்கிலேய கவர்னர் தன் அதிகாரியிடம் அன்னை பீ அம்மா அவர்களை கைது செய்வது பற்றி ஆலோசனை செய்தலில் அன்னை அவர்களை கைது செய்வதால் ஏற்ப்படும் பின் விளைவை எண்ணி அந்த திட்டம் கைவிடப்பட்டது. 

 அன்னைக்கு புகழாரம் சூட்டிய காந்திஜி:

முதல் உலகப்போரும், கிலபாத் இயக்க போராட்டமும் முடிவு பெற்ற காலம் 1924-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அன்னை பீ அம்மா காலமானார்கள். அன்னாரின் இழப்பு அன்றைய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. ஒரு முஸ்லிம் பெண்மணியாக இருந்து நாட்டிற்கு அன்னாரின் சேவை மறக்கமுடியாதது. மகாத்மா காந்திஜி அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இளவர்களின் சக்தி உள்ள முதிர்ந்த பெண்மணி, அந்நிய சர்வாதிகாரம் ஒழிந்து, சுதந்திர நாடு பெற ஓய்வு இன்றி போராடிய பெண்மணி, கையால் நூலப்பட்ட கதரே அணிந்து அதையே மக்களும் அணிய சொன்ன பெண்மணி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு போராடிய ஓர் உன்னத பெண்மணி” என்றார்கள். மற்றொரு தேசிய தலைவர் சுவாமி சாரதா நந்த் அவர்கள் அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு உண்மையில் ஆர்வம் உள்ள நபர் இருக்கிறார்கள் என்றால் அது அன்னை பீ அம்மா தான்” என்று சொன்னார்கள்.

கணவரை இழந்து விதவையாக வாழ்கிறோம் என எப்பெண்ணும் துக்கப்பட்டு தன் வாழ்வை எண்ணி வருத்தப்படக்கூடாது என்ற கருத்தை தாய்க்குலத்திற்கு சொல்ல எண்ணும் இந்த இனியவன், என் இக்கட்டுரையை இஸ்லாமிய பெண்மணிக்கு அர்ப்பணம் செய்கிறேன். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.