சூரத்: பிரதமர் மோடியின் பெயர் பொறித்த கோட்டின் ஏலம் தொடர்கிறது. நேற்று காலை ரூ. 51 லட்சம் தொகையுடன் தொடங்கிய ஏலம் இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. நேற்றைய முதல் நாள் இறுதியில் அந்த கோட் ரூ. 1.21 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. சூரத்தில் இந்த ஏலம் நடந்து வருகிறது. ஒபாமா டெல்லி வந்தபோது இந்த கோட்டைத்தான் போட்டிருந்தார் மோடி. அதைத்தான் தற்போது ஏலம் விடுகின்றனர். இதுபோக மோடிக்கு வந்த பல்வேறு பரிசுப் பொருட்களையும் கூட ஏலத்தில் விட்டுள்ளனர். நேற்று காலை ஏலம் தொடங்கியது.
பாஜகவைச் சேர்ந்த ராஜுபாய் அகர்வால் என்பவர் கோட்டை, ரூ. 51 லட்சத்திற்கு ஏலம் கேட்டு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்ற ஜவுளி அதிபர் ரூ. 1 கோடிக்கு அதைக் கேட்டார். அப்படியே மெல்ல மெல்ல ரேட் கூடி கடைசியாக ரூ. 1.21 கோடிக்கு வந்து நின்றது. இந்தத் தொகைக்குக் கேட்டவர் தொழிலதிபர் ராஜேஷ் ஜூனேஜா. அகமதாபாத்தில் உள்ள ஜேட் ப்ளூ டெய்லரிங் நிறுவனம்தான் இந்தக் கோட்டை தைத்தது. இதுதான் மோடி குர்தாவுக்கும் காப்பிரைட் வாங்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மோடி கோட் ஏலம் விடப்படுவதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் கிரண் பேடி நேற்று மாலை ஒரு டிவிட் போட்டார். அதில், பிரதமரின் கோட் என்பது விலை மதிப்பில்லாதது. மரியாதைக்குரியது. எனவே அனைத்து இந்தியர்களும், என்ஆர்ஐகளும் இந்த ஏலத்தில் இணைந்து இந்த கோட்டை மிகப் பெரிய விலைக்கு ஏலத்தில் எடுத்து நல்ல விஷயத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏலத்தில் கிடைக்கும் தொகையை கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment