இது ஆறு மாத சிசு முதல் 60 வயது பாட்டி வரை, வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் தாக்குகிறது. புகைக்காத, மது அருந்தாத, அணு உலைக்கு அருகில் இல்லாத, மார்பு விரியும்போது 120 செ.மீ., சுருங்கும்போது 105 செ.மீ நிலையில் உள்ள சிக்ஸ்பேக் நபர்கள் என எவருக்கும் எப்போதும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. அஞ்சு சுத்து முறுக்கு, வீட்டு அதிரசம் சாப்பிட்ட சமூகம் நாம். ஆனால், இப்போது எங்கு இருந்து வருகிறது, எப்படிச் செய்கிறார்கள், என்னவெல்லாம் இருக்கிறது என எதுவும் தெரியாமல் எல்லா உணவுப் பொருட்களிலும் மிளகாய் வற்றலைத் தூவி வாய் பிளந்து தின்றுகொண்டிருக்கிறோம். ‘ஐபோன்ல ஓவுலேஷன் ஆப்ஸ் சிக்னல் காட்டுது. இன்னைக்குக் கண்டிப்பா காதல் செஞ்சாகணும்’ என இளம்தம்பதிகள் காதல் புரியவும் அலாரம்வைக்கிறார்கள். இவை எல்லாமும்கூட புற்றுக்குக் காரணங்கள்தான்!
திராட்சைக் கொத்தின் முதுகில் படிந்திருக்கும் ஆர்கனோ பாஸ்பரஸ் உரத் துணுக்குகள், கொளுத்தும் வெயிலில் நின்ற காரின் உட்புற அலங்காரங்கள் உமிழும் பென்சீன், பில்டிங் செட் விளையாடும்போது அதில் கசியக்கூடிய டயாக்சின், சமையலறை அலங்காரத்துக்கு மரமும் பிளாஸ்டிக் கலவையும் சேர்த்துத் தயாரித்த மெலமின் ஃபினிஷ் அடுக்குகள் கசியவிடும் யூரியா ஃபார்மால்டிஹைடு என இவை எல்லாம் அடினோ கார்சினோமா முதலான பல்வேறு புற்றுக்களையும் அடிச்சுவடு தெரியாமல் செருகுகின்றன.
எப்போது ஒரு சராசரி செல், புற்றுச்செல்லாக உருவெடுக்கும் என எவராலும் இன்று வரை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை. பாதுகாப்பு அரணாக இருந்துவந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபட்டதாலா, Apoptosis எனும் துல்லிய உடல் செல் புரோகிராம் பிழையாகப் படைக்கப்பட்டதாலா, இல்லை அதைப் படியெடுக்கும்போது மன அழுத்தத்தில், சூழல் சிதைவில், உணவு நச்சில் செல் இழைக்கும் தவறினாலா… எதுவும் தெரியாது. ஆனால், சில உணவுப் பழக்கங்கள் பசியை ஆற்றுவதோடு, நோயைத் தடுக்கவும் பயனாகும் என்பது மட்டும் மருத்துவப் புரிதல்!
‘சூடா ஒரு டீ சாப்பிட்டு வரலாம் மாப்பிள்ளை’ என்ற ஓர் அழைப்பு உற்சாகம் மட்டும் தராது. புற்று அணுக்களை எதிர்க்கவும் வழிவகுக்கும் என்கிறது நவீனப் புரிதல். தேயிலையின் கருப்பொருட்கள் உடலுக்குள் துறுதுறு விறுவிறு உற்சாகத்தை விதைப்பவை. வெள்ளைச் சர்க்கரை, வெள்ளைப் பால் கலக்காமல் கறுப்புத் தேநீராக அருந்தினால் அதிக பலம் நிச்சயம். தேநீரைச் சுவைபட மாற்ற, மணமூட்ட… அதை வறுத்து, ரோஸ்ட் செய்து என பல வன்முறைகளை பிரபல தேயிலை நிறுவனங்கள் நிகழ்த்துவது உண்டு. அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைச் செய்யாமல், பச்சையாக அப்படியே நீர்த்துவம் மட்டும் உலர்த்திவரும் க்ரீன் டீ, இன்னும் கூடுதல் சிறப்பு. தேநீர் மிகச் சிறப்பாக இருந்தாலும், அதில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லித் துணுக்குகள் குறித்த ஆய்வு முடிவுகள் நம்மை அதிரவைக்கின்றன. சோழ மண்டலக் காடுகளை மழித்து தேயிலை பயிரிட்ட சூழலியல் வன்முறை போதாது என, இப்போது அந்தத் தேயிலையிலும் எக்கச்சக்க பூச்சிக்கொல்லிகளை வரம்புக்கு மீறித் தெளிப்பதன் விளைவே இது!
புற்றைப் பொறுத்தமட்டில் நம் முதல் காவலன், பழங்கள்தாம். சொல்லப்போனால், அனைத்துக் கனிகளுமே ஏதோ ஒருவிதத்தில் புற்றுநோயின் வருகையைத் தடைசெய்கின்றன. காடுகளின் ஓரத்தில் கிடைக்கும் இலந்தை முதல், மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஸ்பெர்ரிகள் வரை ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் புற்றோடு மோதும் வல்லமை உடையது. கனிகளின் நிறங்கள், பூச்சிகள், பறவைகளை ஈர்க்க இறைவன் படைத்ததாகக் கூறப்பட்டாலும் அவற்றை ருசிக்கும் மனிதர்களுக்கு சுவையோடு சேர்த்து, புற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை வழங்கவும் செய்கிறது. சிவந்த நிறத் தக்காளியின் மெல்லிய தோலில் நிறைந்துள்ள சிவப்பு நிறச் சத்தான லைக்கோபீன்கள், ஆண்களின் புராஸ்டேட் கோளப் புற்றுநோயைத் தடுக்கக்கூடியவை. சாதாரணமாக 50 வயதைக் கடந்த ஆண்களுக்கு புராஸ்டேட் கோள வீக்கம் இயல்பான ஒன்று. அது வெகுசிலருக்கு புற்றாக மாறும் அபாயம் உண்டு. இந்த மாற்றத்தைத் தடைசெய்யும் சத்து, தக்காளியின் சிவந்த நிறத் தோலுக்கு உண்டு. வெள்ளைப் பூசணி, வெள்ளரி விதையும் இதே திறன்கொண்டவை. புராஸ்டேட் கோள வீக்கம் உள்ளவர்கள் தினமும் சின்ன வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற சாலட்களைச் சாப்பிடுவது அந்தக் கோளப் புற்றைத் தடுக்க உதவும்.
கமலா ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெல்லிய உட்தோலில் சிட்ரஸ் பெக்டின் என்ற பொருள் உள்ளது. இது பல புற்றுநோய்களைத் தடுக்கும் இயல்பு உள்ளது. பொதுவாக ஆரஞ்சுப் பழத்தை ஜூஸாகச் சாப்பிடாமல் அப்படியே சுளையாகச் சாப்பிடும்போதும் நார்ச்சத்தும் புற்றுநோய் தடுப்புச் சத்தும் கிடைக்கும். உள்ளூர் கனிகளில் சிவப்புக் கொய்யா, நாவல் பழம், திண்டுக்கல் பன்னீர்த் திராட்சை போன்றவை புற்றுநோய்த் தடுப்பில் திறன் வாய்ந்தவை. குறிப்பாக பன்னீர்த் திராட்சையின் விதையில் உள்ள துவர்ப்புச் சுவையுடைய ரிசர்விடால் சத்து புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கொட்டையில்லாத திராட்சைக்கு கூடுதல் விலை கொடுக்கும் முட்டாள் கும்பலாக இனியாவது நாம் இருக்க வேண்டாம். நாவல் பழத்தின் கருநீல நிறம் நாவில் படிவதை நாம் பார்த்திருப்போம். அந்த நிறமிச் சத்தும் புற்றை எதிர்க்கும் வல்லமைகொண்டது.
பெண்களின் மார்பகப் புற்றுநோயையும் நாம் பழங்களைக்கொண்டு எதிர்க்கலாம். 40 வயதைக் கடந்த பெண்கள், மாதவிடாய் முடிவை நெருங்கும் வயதினர், தினமும் உணவில் ஏதேனும் ஒரு கனியை எடுத்துக்கொள்வது மார்பகப் புற்றுநோய் வருகையைத் தடுக்கும். குறிப்பாக பப்பாளிப் பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், தர்பூசணி… இவற்றை தினசரி உட்கொள்ளும்போது புற்றின் வருகை குறையும். வேகவைத்த பீட்ரூட், தர்பூசணி, மாதுளை இவற்றை சாறாக அடித்து அதில் ஓரிரு புதினா இலைகளைப் போட்டு அரை ஸ்பூன் மலைத் தேன் விட்டு வாரம் இரண்டு முறை அருந்துவது பெண்களுக்கு கருப்பை, மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
இரைப்பைப் புற்றுநோய்க்கு அதிக காரமுள்ள உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துவருவதும், மது அருந்துவதும், அடிக்கடி வலி மாத்திரைகள் எடுப்பதும் நாள்பட்ட குடல் புண்கள் மற்றும் இரைப்பைப் புண்கள் இருப்பதும் மிக முக்கியக் காரணங்கள். வயிற்றில் எரிச்சல், வலி இருந்து அது இரைப்பைப் புண் எனத் தெரியவந்தும், உணவில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருப்பது புற்றின் வருகையை விரைவாக்கும். இரைப்பை, குடல் சார்ந்த புற்றுகள் வராது இருக்க, மஞ்சள் ஒரு மிகச் சிறந்த தடுப்பு மருந்து. புற்றுக்குக் காரணிகளாக பல விஷயங்கள் உண்டு. மஞ்சளின் பல்வேறு கூறுகள், ஒருங்கிணைந்து இந்தக் காரணிகளை எல்லாம் சரிசெய்வதால்தான், இந்தியர்களுக்கு மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குடல்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு என ஜான்ஹாப்கின் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய்ப் பேராசிரியர் டாக்டர் பரத் அகர்வால் தெரிவிக்கிறார். தனியாக எடுத்துக்கொள்ளும்போது மஞ்சள் எளிதில் உட்கிரகிக்கப்படாமல் இருப்பதும், அதுவே பாலில் மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடும்போது, உணவைத் தாளித்து எடுக்கும்போது மஞ்சள் சேர்த்தாலும், வெண் பொங்கல், கறிக்குழம்பு இவற்றில் சேர்த்து உணவாக்கும்போதும் மஞ்சள் உட்கிரகிக்கப்படும் வேகம், அளவு அதிகரித்திருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இனி உங்கள் வீட்டு சமையலில் ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் எந்தப் பரிமாறலும் இருக்க வேண்டாம்.
சமையலறையில் நேரம் செலவழிப்பது, மடமைத்தனம் என்ற தவறான நவீனப் பிற்போக்குச் சிந்தனை நகர்ப்புறங்களில் பெருகியுள்ளது. அடுப்பங்கறை மெனக்கெடல்கள் அநாவசியமானது. அந்த நேரத்தில் வேலைக்குப் போகலாம்; சினிமா பார்க்கலாம், சமூக வலைதளங்களில் நட்பு பெருக்கலாம் என நினைப்பது அறியாமை; மடமை. உணவின் ஒவ்வொரு கவள உருவாக்கத்திலும் அக்கறையும் கரிசனமும் தேவை. நம் கைப்பட உருவாக்கும் மூலப்பொருட்களை அன்றன்றே சமைத்துச் சாப்பிட்டுவிட வேண்டும். ‘ரெடி டு ஈட்’ உணவுகளில் குவிந்திருக்கும் ரசாயனத் துணுக்குகளில் பெரும்பாலானவை தனித்தனியாகப் பார்க்கும்போது புற்றுக்கு வழிவகுப்பவை. குறிப்பாக செயற்கை வண்ணமூட்டிகள், செயற்கை மணமூட்டிகள், நீண்ட நாளுக்குக் கெட்டுப்போகாமல் வைத்திருப்பவை என எல்லாவற்றையுமே அகலக் கண்களால் பார்க்கும்போது, அதன் பின்னணியில் பயங்கரங்கள் ஒளிந்துதான் இருக்கின்றன. துரித உணவுகளில் சேர்க்கப்படும் உப்புக்கள் மறுபடி மறுபடி சூடாக்கப்படும்போது பிரிந்து, செல்களைச் சிதைக்கும் தன்மையோடு உடலில் வலம் வரத் தொடங்கும். அதனால், ‘இப்போது நேரம் இல்லை’ எனச் சொல்லி துரிதங்களைத் துரத்தினால், பிறகு வாழ்க்கையிலேயே அதிக நேரம் இருக்காது. வெள்ளைச் சர்க்கரை எனும் சீனி பலர் நினைப்பதுபோல நீரிழிவுக்கு மட்டும் சாதகமானது அல்ல. புற்றுநோய் பல்கிப் பெருக, உடலுக்கு வெள்ளைச் சர்க்கரைதான் காரணமாக இருக்கிறது. புற்றில் இருந்து மருத்துவத்தால் மீண்டுவரும் ஒவ்வொருவரும் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தப்பட்ட பண்டங்களை முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நலம். ஓர் இடத்தில் புற்றுசெல்களும் நல்ல செல்களும் இருக்கும்போது அந்த இடத்தில் சர்க்கரை வந்தால், புற்றுசெல்கள் சர்க்கரையை வேகமாக உட்கிரகித்து புற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புற்றுநோயைத் தடுக்க விரும்புபவர்களும், புற்றுநோயில் இருந்து மீண்டுவருபவர்களும் வெள்ளைச் சர்க்கரையை விலக்குவது நன்று. அதேபோல் சர்க்கரைக்கு மாற்றாக ஜீரோ கலோரி எனக் கூறிக்கொண்டு சந்தைக்கு இன்று வரும் பல்வேறு செயற்கை இனிப்புகள், அதி கொதிநிலையில் பிளாஸ்டிக்கு களை எரித்தால் வரும் டயாக்சினைப் போல, புற்றுநோயைத் தருவிக்கும் காரணியாக மாறுகின்றன.
காய்கறிகளில் பிரக்கோளி புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் பயன்தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகள் புற்றுநோய் சிகிச்சையில் பொருத்தமான உணவுகள். குறிப்பாக மோர், சிறிய வெங்காயம் சேர்த்த கம்மங்கூழ், மணமூட்டிகள், நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் செய்த வரகரிசி பிரியாணி, உப்புமாவாக பொங்கலாகச் செய்யப்படும் தினையரிசி உணவுகள் என இவை எல்லாமே அடிப்படையில் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக உமிழ்பவை. புற்றுநோய் சிகிச்சையின்போதும், கதிர்வீச்சு சிகிச்சையின்போதும் கதிர்வீச்சுக்குப் பிந்தைய உடல் தேறிவரும் காலத்தின்போதும் தினையரிசி கம்பு, வரகரிசி, சாமை, குதிரைவாலி இவற்றில் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
கிட்டத்தட்ட 70 சதவிகிதப் புற்றுநோய்களை உணவின் மீதான அக்கறையை வைத்தே, நாம் ஆரம்ப காலத்திலேயே தடுக்க முடியும். கூடுதல் கரிசனமும் பாரம்பர்யப் புரிதல்கொண்ட மெனக்கெடல்களும் மட்டுமே இந்த நோயை முற்றிலும் தடுக்க, தீவிரப்படாமல் இருக்க இன்று வரை உதவும். இன்று பஞ்சாப் மாநிலத்தில் பெருவாரியாக புற்று பெருகியதற்கு மிக முக்கியக் காரணம், பாசுமதி அரிசியை எக்குத்தப்பாக விளைவிக்க அந்த மண்ணில் கொட்டி கபளீகரம் நடத்தும் ரசாயன உரங்கள்தான். பாசுமதி விளைந்த நிலத்தின் அடியில் அணுக் கதிர்வீச்சு உள்ள கனிமங்கள் உருவாகும் அளவுக்கு, அங்கே ஏராளமாக ரசாயனப் பூச்சிக்கொல்லி நச்சுக்கள் கலக்கப்படுவது சமீபத்தில் தெரியவந்துள்ளது. நச்சு ரசாயனத் துணுக்குகள்கொண்ட பளபளப்பான காய்கறிகளைவிடச் சற்று தொய்வாக, பூச்சிக்கும் புகலிடம் கொடுத்த காயும் கனியும் நஞ்சில்லா ருசிகொண்ட உணவு என்பது மட்டும் அல்ல, புற்று வராது நம்மைக் காக்கவும்கூடியது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, உலக நாடுகளை எல்லாம் தடைசெய்துள்ள 13 வகை கொடிய ரசாயனங்கள், நாம் அன்றாடம் சாப்பிடும் கத்திரிக்காய் அவரைக்காயில் இருந்து அரிசி, பருப்பு வரை அனைத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ரசாயனத் துணுக்குகளில் பல, உலக சுகாதார நிறுவனம் சொல்லும் குரூப் ஒன் புற்றுநோய் காரணிகள் பட்டியலில் இடம்பெற்றவை.
உற்பத்தியைப் பெருக்குகிறேன்; பிற பூச்சிகளிடம் இருந்து காக்கிறேன்; அதிக நாட்கள் சந்தைப்படுத்துகிறேன் எனப் பல காரணங்களைக்கொண்டு நாம் சாப்பிடும் பெருவாரியான உணவுகளில் நஞ்சு செருகப்பட்டுள்ளது. இன்று பெயர் அளவில் பெருகியிருக்கும் புற்றுநோய்க் கூட்டத்துக்கு மிக முக்கியக் காரணம் இந்தப் பூச்சிக்கொல்லி ரசாயனங்களே. வீட்டுத் தொட்டியில் சின்னதாகச் சிறிய நெல்லிக்காய் அளவில் வரும் தக்காளியிலும் தளதளவென வளர்ந்துவரும் கீரையிலும் இன்னும் கத்திரி, வெண்டை, கொத்தமல்லி கீரையிலும் இந்த விஷத் துணுக்குகள் பிரச்னை கிடையாது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் எனக் கூறிய காலம்போய், வீட்டுக்கு 10 தொட்டிச் செடிகள் வளர்ப்போம் என்பது காலத்தின் கட்டாயமாகிவருகிறது. பணப் பெட்டிகளில் அல்ல, அந்தச் சின்னஞ்சிறு தொட்டிகளிலேயே உங்கள் வாழ்வும் வளமும் இருக்கும்!
நன்றி/மருத்துவர் கு.சிவராமன்
No comments:
Post a Comment