அமைதியும், நல்லிணக்கமும் பராமரிக்கப்பட வேண்டும் என்று கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பேசினார்.
கவர்னர்கள் மாநாடு
டெல்லியில், இரண்டு நாட்கள் நடைபெறும் கவர்னர்கள் மாநாடு, நேற்று தொடங்கியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், 21 மாநில கவர்னர்கள், 2 துணை நிலை கவர்னர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூய்மை பாரதம்
இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு, சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த ஆண்டையொட்டி, 2019–ம் ஆண்டுக்குள் ‘தூய்மை பாரதம்’ திட்ட இலக்கை எட்டுவது, அரசியல் சட்டத்தின் 5 மற்றும் 6–வது அட்டவணை தொடர்பான பிரச்சினைகள், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி விவகாரம் ஆகியவை பற்றி இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
மத நல்லிணக்கம்
மாநாட்டில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
அரசியல் சட்டம், அனைவரது சுதந்திரம், உரிமை, சமத்துவம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது. இந்த கொள்கை மற்றும் கோட்பாடுகளில் இருந்து வழுவிச் சென்றால், அது இந்தியாவின் ஜனநாயக கோட்பாட்டை பலவீனப்படுத்தி விடும். மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும்.
அரசியல் சட்டப்படி, மாநிலங்களில் விவகாரங்கள் நடப்பதை உறுதி செய்வது, கவர்னர்களின் பிரதான பொறுப்பு. அமைதியும், மத நல்லிணக்கமும் பராமரிக்கப்பட வேண்டும்.
அமைதியான உறவு
எல்லா நாடுகளுடனும் அமைதியான உறவை கடைபிடிக்கும் கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. எல்லைப் பிரச்சினைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
2025–ம் ஆண்டுக்குள், உலக அளவில் இந்தியாவில் தான் மாபெரும் மனித சக்தி இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். ‘மேக்–இன்–இந்தியா’ திட்டத்தின் வெற்றிக்கு திறன் மேம்பாடு முக்கியமானது.
இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
No comments:
Post a Comment