மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்களின் நிலைமை மோசமாகி வருவதால் பதற்றம் உருவாகியுள்ளது. மேட்டுப் பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய போராட்டம் காரணமாக, 100 சதவீதம் வனச்சரகர் பணியிடங்களை வனவியல் படிக்கும் மாணவர்களுக்கே முந்தைய திமுக அரசு ஒதுக்கியது. அதனை 25 சதவீதமாக அதிமுக அரசு மாற்றியமைத்தது. அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை மாணவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு நடத்திய போது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது முடிந்ததும் உங்களின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என்று அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததனர்.
நிறைவேறாத வாக்குறுதி
நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 181 வனவர்களுக்கான பணியிடத் தேர்வு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக வரும் 22-ஆம் தேதி சுமார் 60 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
24 நாட்களாக போராட்டம்
வனச்சரகர் பணியிடங்கள் 100 சதவீதம் மட்டுமல்ல, மீதியுள்ள வனவர் பணியிடங்கள் உள்ளிட்ட வனத்துறை பதவிகளும், வன வியல் மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரி 24 நாட்களுக்கு முன்பு திடீர் போராட்டத்தில் இறங்கினர் மாணவ, மாணவிகள்.
உண்ணாவிரதம்
கல்லூரி வளாகத்திலேயே தினம் ஒரு நூதனப் போராட்டம் நடத்திய அவர்கள், கடந்த நான்கு நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இரண்டாவது தினத்திலேயே மாணவ, மாணவியர் மயக்கமடைந்து மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
40 பேர் மயக்கம்
நேற்று மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமானது. 40 பேருக்கு மேல் மயக்கமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும், அதில் பலர், போராட்டத்துக்கு திரும்பி வர முடியாத நிலையும் இருப்பதால் 108 ஆம்புலன்ஸில் ஏற மறுத்தனர்.
வலுக்கட்டாயமாக அனுமதி
வலிப்பு வந்து துடித்த ஒரு மாணவி, சிகிச்சை பெற மறுத்தார். மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மயக்கமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பெற்று திரும்பி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.
போலீஸ் குவிப்பு
நேற்று மதியம் சிபிஐ(எம்எல்) மற்றும் எஸ்ஒஎப்ஐ என்ற மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், கல்லூரியின் பிரதான வாயிற் கதவு போலீஸாரின் கட்டுப் பாட்டில் கொண்டுவரப்பட்டு, பூட்டப்பட்டது.
அனுமதி மறுப்பு
அதற்குப் பிறகு திமுக, காங்கிரஸ், தமாக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் என எந்த கட்சியினரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை சந்திக்க காந்திய மக்கள் இயக்கத்தினரும் நேற்று அனுமதிக்கப்படவில்லை. வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment