சென்னையில் மாணவர் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அடுக்கடுக்காக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்
சென்னையில் மாணவர் இந்தியா என்ற அமைப்பு, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
வைகோ தனது உரையில், "மத நல்லிணக்கத்தை மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்ததால், நாதுராம் கோட்சே அவரை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். ஆனால், இப்போது நாட்டு மக்களால் பரவலாக தேச துரோகி என்றழைக்கப்படும் கோட்சேவை, நாடாளுமன்றத்திலேயே எம்.பி. ஒருவர் பாராட்டி பேசுகிறார். மேலும், கோட்சேவுக்கு நாடு முழுவதும் கோயில் கட்ட வேண்டும்; சிலை வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள். இதையெல்லாம் பார்த்து, கேட்டு விட்டு பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார். மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட எல்லா சக்திகளும் ஒன்று சேரவேண்டும். அவ்வாறு சேர்ந்தால் பிரதமர் மோடியால் நிச்சயமாக தாக்கு பிடிக்க முடியாது. அப்போதுதான் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும்" என்றார்.
மேலும், "காந்தி ஒரு போர்வையை அணிந்தபடி நாட்டு மக்களிடையே சேவை புரிந்தார். ஆனால், இப்போதைய பிரதமர் மோடியோ தான் அணியக்கூடிய ஆடைக்கே லட்சக்கணக்கில் செலவு செய்கிறார். நாட்டின் பிரதமராக இருந்துவிட்டு, தேசத்திற்காக உழைத்து மாண்டு போன காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த கூட அவர் செல்லவில்லை. அதற்கு அவர் அறவே தகுதி இல்லாதவர் என்ற உண்மை அவருக்கே தெரிந்ததால் தான் போகவில்லை. கோட்சேக்கு சிலை வைப்போம் என்று சொல்பவர்களை கண்டிக்காமல் இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கைகுலுக்கவும் தகுதியற்றவர் ஆவார்" என்றும் கூறினார்.
No comments:
Post a Comment