வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தோல் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுநீர்த் தொட்டி உடைந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காடில் தோல் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் மாவட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்காக ஆலையில் மிகப்பெரிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த தொட்டி இன்று அதிகாலை உடைந்து விழுந்தது. இதனால் அதில் இருந்த நச்சுத்தன்மை கொண்ட கழிவு நீர், அருகே இருந்த ஆலையில் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரவுப்பணி முடிந்த பிறகு அங்கேயே தரையில் படுத்து தூங்கி விடுவது வழக்கம். அவர்கள் அனைவரையும் நச்சுகலந்த இந்த கழிவுநீர் சூழ்ந்து கொண்டு மூழ்கடித்தது. கழிவுநீரில் தோலை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குரோமியம் மற்றும் பாக்மிட் அமிலம் கலந்திருந்ததால் தொழிலாளர்கள் அனைவருடைய உடல்களும் வெந்து போனது; இதனால் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 தொழிலாளர்கள் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து பற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ரசாயனக் கழிவுகளில் தொழிலாளர்களின் உடல்கள் கிடந்ததால், உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டுவரப்பட்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த தேடும் பணியில் 10 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, "இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்" என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment