காங்கிரஸில் இருந்து மகன் கார்த்தியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விலகினால் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதே நேரத்தில் இளங்கோவனின் இந்த கருத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு வெளியேறியது குறித்து விமர்சித்திருந்தார்.
பதவி சுகம் அனுபவித்த ஜெயந்தி
மேலும், காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அன்றைய பிரதமர் ஐ.கே.குஜராலியிடம் கெஞ்சி, கூத்தாடி அங்கேயும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து பதவியை ஜெயந்தி நடராஜன் அனுபவித்ததை யாரும் மறந்து விட முடியாது.
தமிழர்களை சுட்டுத் தள்ளிய தாத்தா
இவரது தாத்தா பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிட்டுக்குருவிகளை சுட்டு தள்ளுவது போல தமிழ் உணர்வாளர்களை சுட்டுத்தள்ளினார். காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிற ஜெயந்தி நடராஜன் தமிழ்நாட்டில் உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருந்தார்.
சிதம்பரம் மீது தாக்கு
அத்துடன் , கங்கை தூய்மைப்படுகிறதோ இல்லையோ, தாங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பல மடங்கு தூய்மைப்படும். இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை" என்றும் இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.
சோனியா கோபம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியைத்தான் பெயர் சொல்லாமல் இளங்கோவன் குறிப்பிட்டிருப்பது சிதம்பரம் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவே இளங்கோவனை அழைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.
இளங்கோவன் மறுப்பு
ஆனால் இளங்கோவனோ, சோனியாவிடம் இருந்து எனக்கு எந்த தொலைபேசி அழைப்புமே வரவில்லையே என்று மறுத்துள்ளார்.
ப.சி. ஆதரவாளர்கள் முற்றுகை
இதனிடையே கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய இளங்கோவனின் வாகனத்தை சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment