Latest News

பிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்


கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கல்வியாளருமாகிய பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று சென்னை நுங்காம்பாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கீழக்கரையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், சிறந்த மனிதாபிமானியுமான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இன்று(07/01/2015) மாலை 6 மணியளவில் காலமானார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927, அக்டோபர் 15ல் பிறந்த அப்துர் ரஹ்மான், இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில் பெரும் செல்வாக்கு கொண்டவரும், தயாள குணசீலருமான சேனா ஆனா என்றழைக்கப்படும் வள்ளல் பி. எஸ்.அப்துர்ரஹ்மான் ஐக்கியஅரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும், ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் புகழ் வாய்ந்த ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின் நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார். விபத்தில் இறந்த தனது சகோதரி தஸீம் பீவி பெயரில் பெண்கள் கல்லூரி ஒன்றை கீழக்கரையில் நிறுவியுள்ளார்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்து வருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005-ஆம்ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம், இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.

இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன், உலக அளவில் சக்திவாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இடம் பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தமிழரை தலை நிமிர செய்த வள்ளல் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவு உண்மையில் தமிழருக்குப் பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.