அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து பேசியது பற்றி கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார்தான் அடிக்கடி “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்று கூறுவார்! இப்போது அந்தச் சொற்டொடர்தான் நினைவுக்கு வருகின்றது.
வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கை 18 ஆண்டுகாலமாக இழுத்தடித்துவிட்டு, மத்தியில் பா.ஜ.க. அரசு புதிதாக அமைந்த பிறகு, அதுவும் இந்த வருமான வரித் துறைக்கு, அருண் ஜெட்லி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரை டெல்லியில் ஜெயலலிதா நேரில் சந்தித்த பிறகுதான் அபராதத் தொகையைக் கட்டி சமரசமாகி விடுவதாகவும், வழக்கினைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார் என்றால் நடந்த நிகழ்வுகளை இணைத்து நாட்டு மக்களுக்கு நியாயமான சந்தேகம் வருமா? வராதா?
அதுவும் ஏடுகளில் அருண் ஜெட்லி பிரதமரின் ஒப்புதலோடுதான் சென்றதாகவும் செய்தி வந்துள்ளது. பிரதமரும் இதற்கெல்லாம் உடந்தையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளதே?
ஜெயலலிதாவின் வருமான வரித் துறை வழக்கினைத் திரும்ப பெற்றது பற்றி நாட்டு மக்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களே இன்னும் தீராமல் இருக்கிற போது, மத்திய அமைச்சர் தற்போது ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று பேசியிருப்பது, நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட பெரியாரின் பொன்மொழியான “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதை மெய்ப்பிக்கும் வகையிலே அல்லவா இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment