காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன் திடீரென 2013ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது லோக்சபா தேர்தல் பணிக்காக ஜெயந்தி ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் அதன் பின் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தும் ஜெயந்தி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெயந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் இன்று வெளியாகி இருந்தது. அதில் தாம் கட்சிக்காக பாடுபட்ட விதம், தம்மை ராஜினாமா செய்ய சொன்ன போது நடந்தது என்ன? ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தி என விவரிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஜெயந்தி நடராஜன் தாம் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை விவரித்தார்.
மேலும் கட்சிப் பணிக்காக ராஜினாமா செய்த தம் மீது ராகுல் காந்தியால் அவதூறான செய்திகளை பத்திரிகைகள் எழுதின என்றும் ஜெயந்தி நடராஜன் குற்றம்சாட்டினார். அத்துடன் தாம் இணைந்த போது இருந்த காங்கிரஸ் இப்போதும் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் விலகுவதாகவும் ஜெயந்தி நடராஜன் கூறினார். அதே நேரத்தில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலோ பிற கட்சியிலோ தற்போது இணையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment