Latest News

வளைகுடாவை ஆண்ட இந்திய ருப்பியாக்கள்




பெட்ரோலும், தங்கமும் உலக பொருளாதாரத்தின் நேரடி செலாவணியாக இருக்க வேண்டிய இடத்தில் மறைமுகமாக திணிக்கப்பட்ட டாலரும், யூரோவும் இன்று கோலோச்சிக் கொண்டுள்ளதை கண்டுவருகிறோம் ஆனால் ஒரு காலத்தில் தந்திரமான நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி இந்திய ரூபாய்கள் பல வளைகுடா நாடுகளில் பண்டைய காலம் தொட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை டாலர், யூரோக்களுக்கு இணையாக அந்தந்த நாட்டு அதிகாரபூர்வ வளைகுடா ருப்பியாக்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன.


1965 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக, துபை தனிநாடாக (ஐக்கிய அரபு கூட்டு நாடுகளாக இணையுமுன்) இருந்தபொழுது தங்களுக்கென தனியான கரன்சி நோட்டுக்களை 'ரியால்' என்ற பெயரில் கத்தார் நாட்டுடன் இணைந்து அச்சிடத் துவங்கினர் இன்னும் சில வளைகுடா நாடுகள் 1970/71 ஆம் ஆண்டுகளில் தான் ருப்பியாக்களுக்கு மாற்றாக சுய கரன்சிகளை அச்சிட்டனர். 1972 ஆம் ஆண்டு முதல் தான் அமீரகத்தில் இன்றுள்ள வலுவான திர்ஹங்கள் தோன்றின.

 துபையும் கத்தாரும் இணைந்து 1965ல் அச்சிட்ட ரியால்கள் மற்றும் முதலில் அச்சிடப்பட்ட திர்ஹம்கள்

நமது பாட்டன் முப்பாட்டன் கால பொத்தல் காசு, வீசை, தோலா, அணா என அரசர்கள் கால, ஆங்கிலேய மற்றும் சுதந்திர இந்திய அச்சிட்ட இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுக்கள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் இங்கும் புழக்கத்தில் இருந்த 1 காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, 20 காசு, 25 காசு, 50 காசு, 1 ரூபாய் நாணயம், ரூபாய் தாள்களாக 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என நாம் கேள்விப்பட்ட, படாத அனைத்தும் சேகரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன அதாவது துபையில் இவை அனைத்தும் புழங்கிய பணங்கள் என்ற உயரிய அந்தஸ்துடன், இன்றைக்கு உள்ள இந்திய பணத்தை எக்ஸ்சேஞ்காரன் கூட வாங்க மறுத்து மூஞ்சை திருப்பிக் கொள்கிறான்.

 துபை அருங்காட்சியகங்கள் தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம், அதன் தொடர்பில் முக்கியமான ஷேக் சயீத் அல் மக்தூம் அவர்களின் மாளிகை சம்பந்தமாக விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என முன்பு அறிவிப்பு செய்திருந்தோம். அந்த மாளிகை தான் இந்தியா ருப்பியாக்களின் அருமை பெருமைகளை தன்னத்தே சுமந்து கொண்டுள்ளது.

 ஷேக் சயீத் அல் மக்தூம் மாளிகை







இன்றைய துபையின் ஆட்சியாளரும் அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முஹம்மது அவர்கள் இந்த மாளிகையில் தான் 1949 ஆம் ஆண்டு பிறந்தார்கள், காலப்போக்கில் சிதிலமடைந்த இந்த மாளிகை மீண்டும் 1983 ஆம் ஆண்டு மீண்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று ஓர் அருங்காட்சியமாக மாறி துபையின் பண்டைய வரலாற்றையும், அரச பரம்பரையின் குடும்ப வரலாற்றை எடுத்தியம்பும் புகைப்படங்களையும், 1965 ஆம் ஆண்டு வரை புழங்கிய மதிப்புமிக்க இந்திய கரன்சிகளையும் சேகரித்து வைத்துள்ளனர்.

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, வாங்க! துபை வரலாற்றையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். 1833 ஆம் ஆண்டு அபுதாபி பிரதேசத்திலிருந்து வந்த 'பின் யாஸ்' குடும்ப வழித்தோன்றல்களான அல்மக்தூம் அரச பரம்பரையினர் துபை பிரதேசத்தை கைப்பற்றி சுமார் 180 ஆண்டுகளாக இன்றும் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

துபை பிரதேசம் பண்டைய வணிக கடல்வழியின் பிரதான தடத்தில் அமைந்திருப்பதால் பல நாடுகளும் இதை தங்களின் வணிக விருத்திக்காக கைப்பற்ற முயன்றுள்ளனர் என்பதால் அன்றைய துபை ஆட்சியாளர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்துடன் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தான் பிரிட்டீஷ் இந்தியாவின் கரன்சிகள் வணிகம் மூலம் இப்பிரதேசத்தின் உள்ளே புகுந்து விளையாடியுள்ளது மேலும் சுதந்திர இந்தியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்த 'துபை அஞ்சல்துறை' போன்ற அரசு நிறுவனங்களையும் பிரிட்டீஷ் இந்திய அரசாங்கமே நடத்தி வந்துள்ளது.

ஆர்வமுள்ள மகாஜனங்களே! 3 திர்ஹம் செலுத்தி உள்ளே வந்துதான் பாருங்களேன், இன்னும் நெறைய தெரிஞ்சுகுவீங்க!

அதிரைஅமீன்

 துபையில் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக விக்டோரியா மகாராணி, ஐந்தாம் மற்றும் ஆறாம் ஜார்ஜ் மன்னர்கள், ஏழாம் எட்வர்ட் காலத்திய பிரிட்டீஷ் இந்திய காசுகள் (இன்னும் உண்டு ஏராளம்)




















 ஸ்டாம்ப் கலெக்ஷன்ஸ்






குறிப்பு: 
புகைப்படங்கள் அதிகமாகிவிட்டதால் அரச குடும்பத்து படங்களை பதிய இயலவில்லை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.