காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ஜெயந்தி நடராஜனுக்கு கோடானு கோடி நன்றிகள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுல் குறித்து பரபரப்பான புகார்களை அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயந்தி நடராஜன் காங்கிரஸில் இருந்து வெளியேறியது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர் கடந்த டிசம்பர் 2013 இல் பதவியை விட்டு விலகினார். கடந்த 13 மாதங்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து ஏன் விலகினேன் என்று எந்த விளக்கமும் கூறாமல் இருந்த ஜெயந்தி நடராஜன் தற்போது காங்கிரஸ் தலைமை மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். பதவி விலகும் போது வராத ஞானோதயம் இப்போது திடீரென்று ஞானோதயம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. இது மோடியின் அறிவுரையால் ஏற்பட்டதா ? மோடியின் பயமுறுத்தலால் ஏற்பட்டதா? உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென்று ஏற்பட்ட அரசியல் விபத்தின் காரணமாக 1984 இல் காங்கிரசில் சேர்நத இவர் 1986 முதல் 2013 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து பதவி சுகத்தை அனுபவித்து வந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொண்டோ, சேவையோ செய்யாமல் தொடர்நது 27 ஆண்டுகாலமாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கின்னஸ் சாதனையை படைத்தவர் தான் ஜெயந்தி நடராஜன். காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிற ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி, காங்கிரசுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. அதற்காக உங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும்.
மறைந்த தலைவர் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியேர் வைத்த நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் நீங்கள் செய்த கைமாறு இதுதானா? பதவி விலகுகிற போது அப்பழுக்கற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது சேற்றை வரி இறைக்கிறீர்களே, இதைவிட நன்றிகெட்ட செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? உங்களை யார் மன்னித்தாலும், காங்கிரஸ் கட்சியிலிருக்கிற தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டர்கள். கங்கை தூய்மைப்படுகிறதோ இல்லையோ, தாங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பலமடங்கு தூய்மைப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் ஜெயந்தியைப் போலவே வேறு ஒருவரும், அவரது குடும்பமும் வெளியேறினால் கட்சிக்கு இன்னமும் நல்லது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஈவிகேஎஸ் மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் தான் என கட்சி வட்டாரத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment