'இந்த மனிதருக்கு இயற்கையான மரணம் கிடைக்கக்கூடாது என்கிற வெறி என் நெஞ்சில் எழுந்தது. நாட்டின் ஒரு தீவிரவாதப் பிரிவினருக்கு அநீதியான, தேசவிரோதமான, ஆபத்தான சலுகைகளை காட்டியதற்கு உரிய தண்டனையை அவர் பெற வேண்டியிருந்தது என்பதை உலகம் உணர வேண்டும்‘.
தேசப்பிதா மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் நாயக் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் இது. கோட்சே தனது வாக்கு மூலத்தில் தீவிரவாதப் பிரிவினர் என்று குறிப்பிட்டிருப்பது மதக்கலவரங்களால் அல்ல அல்லலுற்று அநாதையாக நின்ற சிறுபான்மை முஸ்லிம் மக்களைத்தான்.
ராமராஜ்யம் அமைப்பது தான் தமது லட்சியம் என்று இடைவிடாது கூறினார் காந்தி. கோட்சேயின் வாரிசுகளும் ராமனின் ஆட்சியை அமைப்பது தான் தங்களது நோக்கம் என்று இப்போதும் கூறுகிறார்கள். ராமனுக்குப் பிறக்காதவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியில்லாதவர்கள் என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கூறுகிறார்.
ஆனால், காந்தி கனவு கண்ட ராமராஜ்யம் வேறு வகைப்பட்டது. ``ராமராஜ்யம் என ஒரு புனிதமான அரசு கடவுளின் அரசு என்ற பொருளிலேயே நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் ராமனும், ரஹீமும் ஒன்றுதான், ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிரவேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை” என்றார் காந்தி. ஆனால், கோட்சேயின் வாரிசுகளான ஆர்எஸ்எஸ் பரிவாரம் விரும்பும் அகண்டபாரதத்தில் ரஹீம்களுக்கு இட மில்லை. இன்னும் சொல்லப்போனால், வேதக்கல்வியை பெற முயன்ற சூத்திரனான சம்புகனின் தலையைக் கொய்த ராமனே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் அடையாளச் சின்னம். வர்ணாசிரம அடிப்படையிலான ஆட்சியை இந்தியாவில் அமைப்பதுதான் அவர்களது நோக்கம். கொடியவன் கோட்சே தனது கொலைவாக்குமூலத்தில் பகவத்கீதை தந்த உத்வேகத்தினால்தான் காந்தியை கொன்றேன். கடமையைச் செய்தேன், பலனை எதிர்பார்க்கவில்லை என்றார்.
அதனால்தான் மத்திய அயல்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய புனிதநூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார். மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மகாத்மா காந்தியை வில்லனாகவும், கோட்சேவை தேசப்பக்த கதாநாயகனாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காந்தியைப் போலவே கோட்சேவும் ஒரு தேசபக்தன்தான் என்று பேசுகிறார் பாஜக எம்.பி. சாக்ஜி மகாராஜ்கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை வைக்கவும் துணிந்துவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் முதல் சிலையை நிறுவப் போகிறார்களாம். அடுத்து காந்தியத்தால் கவரப்பட்டு, காந்தியின் வாயாலேயே “நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று புகழப்பட்ட - பின்னர் கம்யூனிசத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு பொதுவுடமை போராளியாக திகழ்ந்த தோழர் ஜீவாவின் சிலை அருகே குமரி மாவட்டத்தில் கோட்சேவின் சிலையை நிறுவப் போகிறார்களாம். தன்னை ஒரு எளியமனிதன் என்று அழைத்துக் கொண்ட தூய ஆத்மாவான மகாத்மா காந்தியை படுகொலை செய்ய ஆறு முறை முயற்சி நடந்துள்ளது. கடைசியாக 1948ம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி காந்தி கொல்லப்பட்டார்.
நீதிமன்றத்தில் நாதுராம் நாயக் கோட்சே குழுவினர்அவரை கொல்வதற்கு 1948ம் ஆண்டு ஜனவரி 20ந்தேதியன்றும் கோட்சேவும் அவனது கூட்டாளி மதன்லால் போன்றவர்கள் முயன்றனர். அவர்களது திட்டப் படி மதன்லால் குண்டு வீசினான். ஆனால், கார்கரே மற்றும் கோபால் கோட் சேவால் காந்தியை துப்பாக்கியால் சுடமுடியவில்லை. இந்த கொலை முயற்சியின் போது மதன்லால் பிடிபட்டான். தான் ஒரு தனிநபரல்ல என்றும் தனக்குப் பின்னால் ஒரு கோஷ்டி உள்ளது என்றும் அவன் கூறினான். இருந்தும் அந்த கோஷ்டி ஏன் பிடிக்கப்படவில்லை என்பது இந்திய வரலாற்றில் இன்னமும் மர்மமான புதிராகவே உள்ளது.
விடுதலை பெற்ற இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று காந்தி தொடர்ந்து கூறியது தான் கோட்சே கும்பலின் ஆத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மோடி அரசு வெளியிட்ட விளம்பரத்தில் “மதச்சார்பற்ற, சோசலிச” என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு அரசியல் சாசன முகவுரையை வெளியிட்டுள்ளனர்.
சிவசேனை கட்சியினர் மதச்சார்பற்ற, சோசலிச என்கிற வார்த்தைகளை நிரந்தரமாக அரசியல் சாசனத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அகண்ட பாரதம் அமைத்து சிந்து நதியில் தன்னுடைய அஸ்தியை கரைக்க வேண்டும் என்பதுதான் கோட்சேயின் கடைசி விருப்பமாக இருந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் இந்து ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்சேயின் கோட்பாடுகள்தான் இவர்களை இன்னமும் வழிநடத்துகிறது. ஆர்எஸ்எஸ் என்ற பாசிச பாணி அமைப்பின் அரசியல் முகம்தான் பாரதிய ஜனதா கட்சி. இனவெறி கொண்டு அலைந்த, ஆரிய ரத்தம் மட்டுமே தூய்மையான ரத்தம் என்று கொக்கரித்த பாசிச ஹிட்லரோடும், முசோலினியோடும் நேரடியாக தொடர்பு வைத்தவர்கள் கோல்வால்கர், சாவர்க்கர் போன்றவர்கள். கோட்சே ஆர்எஸ்எஸ் பள்ளியில் பயின்றவன். அந்தக் கோட்பாடுகளில் வளர்க்கப்பட்டவன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் கோட்சேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவ்வப்போது அத்வானி போன்றவர்கள் கூறி வந்துள்ளனர். ஆனால், நாதுராம்கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சே அளித்த ஒரு பேட்டியில், “நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட ஆர்எஸ்எஸ்சில் தான் அதிகம் வளர்ந்தோம், அது எங்களுக்கு குடும்பம் போன்றது” என்று கூறியுள்ளான்.
அந்தக் குடும்பத்தின் ஆட்சி தான் இப்போது இந்தியாவில் நடந்து வருகிறது. அதனால் தான் காந்தியை துரோகியாகவும், கோட்சேவை தியாகியாகவும் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்தவர்கள் தங்களது மதவாத சாகசத்தின் மூலம், பெருமுதலாளிகளின் ஆசியுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டனர். காந்தியின் பிறந்த நாளை தூய்மை இந்தியாவுக்கான துவக்கநாள் என்று அறிவித்து அவரை சுத்தத்தின் அடையாளமாக மட்டுமே மாற்ற முயல்கின்றனர்.
காந்தியின் அக சுத்தம் இவர்களுக்கு ஆகாத ஒன்று. காந்தியடிகள் முன்மொழிந்த உறுதியாக பின்பற்றிய மதநல்லிணக்கம், மத ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் அவரை மட்டுமல்ல அவரை கொன்று குவித்தவர்களையும் நினைவில் நிறுத்துவோம். இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை பாதுகாக்க உறுதியேற்போம்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
No comments:
Post a Comment