"அரசியல் சாசனத்தில் இருந்து பொதுவுடமை, மதசார்பின்மை ஆகிய வார்த்தைகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்" என்று சிவசேனா கட்சி கூறியுள்ள கருத்தால் நாட்டு மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்ட விளம்பரத்தில், அரசியல் சாசனத்தின் முகவுரையிலிருந்து பொதுவுடமை, மதசார்பின்மை ஆகிய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு இருந்தன. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழும்பின. இந்நிலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, "அரசியல் சாசனத்தில் இருந்தே இந்த இரு வார்த்தைகளையும் நீக்க வேண்டும்" என்று கூறியிருப்பது சர்ச்சையை மேலும் அதிகபடுத்தி உள்ளது.
விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராபட், "வார்த்தைகளை நீக்கி இருப்பது சர்ச்சையல்ல என்றும், அது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் அனைத்து மதத்தினரும் வசிக்கலாம். ஆனால், நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரிமையானதாகும். மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாகியிருக்க, இந்தியாவை இந்துக்கள் நாடு என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?" என கேள்வியும் எழுப்பி உள்ளார்.
சிவசேனாவின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இந்தியா இந்து நாடு இல்லை என்றும், அது ஒரு மதசார்பற்ற நாடு என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர ஐயர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விளம்பரமும், சிவசேனாவின் கருத்தும் நாட்டின் அரசியல் சாசனத்தை இழிவுப்படுத்தும் முயற்சி என்றும் கூறியுள்ளார். விளம்பர விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, அரசியல் சாசன முகவுரையில் பொதுவுடமை, மதசார்பின்மை ஆகிய வார்த்தைகள் 1976-க்கு பின்னரே சேர்க்கப்பட்டன; விளம்பரத்தில் 1976-க்கு முந்தைய முகவுரையையே பயன்படுத்தியதாக மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜீவ் வர்தன் கூறியுள்ளார்.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment