ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் ஆக்கிரமிப்பும், ஆதிக்கமும் மேலோங்குவதால் வாக்காளர்கள் வந்து சுதந்திரமாக வாக்களிக்க இயலாத நிலை உருவாகிறது. அண்மையில், ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அவர்கள், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் குறித்து, "வாக்காளர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் அவர்களை மொத்தமாக விலைபேசும் அவலம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது" என்று சுட்டிக்காட்டி கூறியிருக்கிறார். இது ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் நேர்ந்துள்ள மிகப்பெரும் தலைகுனிவாகும்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அகில இந்திய அளவில் இடைத் தேர்தல்களுக்கு என புதிய விதிமுறைகளை வகுத்திட வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. குறிப்பாக, இடைத் தேர்தலின் போது அமைச்சர்கள் பரப்புரை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்னும் அடிப்படையில், அரசு எந்திரங்களை முழு வேகத்தில் ஈடுபடுத்துவது தமிழகத்தில் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இந்நிலையில், ஜனநாயக்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் நடைபெறும் இடைத் தேர்தலில் பங்கேற்பது பொருளற்றதாகும்.
எனவே, இடைத்தேர்தலுக்கு என்று புதிய விதிமுறைகளை வரையறுக்க வலியுறுத்திடும் வகையிலும், இடைத்தேர்தலின் போது ஆளும் கட்சியினர் மேற்கொள்ளும் மேலாதிக்கப் போக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலும் "ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல் புறக்கணிப்பது என முடிவு செய்கிறது" என்று கூறியுள்ளார்.
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment