பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கருவூல ஊழியர், அவரது மனைவி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர் மதுரை அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (65). ஓய்வு பெற்ற கருவூல ஊழியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (60). இவர்கள் தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட குடும்பத்தோடு திருமங்கலத்திற்கு வந்தனர். பொங்கல் பண்டிகை முடிந்ததும் அவர்கள் இன்று அதிகாலை காஞ்சிபுரத்திற்கு காரில் புறப்பட்டனர். காரில் நாராயணசாமி, பாக்கியலட்சுமி, அவர்களது மருமகள் சித்ரா(25), சித்ராவின் 9 மாத கைக்குழந்தை பிருத்தீவ் ஆகியோர் இருந்தனர். காரை டிரைவர் பாண்டியன் ஓட்டினார்.
இவர்களது கார் காலை 7 மணிக்கு பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அடுத்த மலையப்பநகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது காருக்கு முன்னால் சென்ற லாரி திடீரென வலது பக்கமாக திரும்பியது. இதைப் பின்னால் வந்த கார் டிரைவர் எதிர்பார்க்கவில்லை. திடீரென லாரி திரும்பியதால் காரை டிரைவரால் கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை. எதிர்பாராதவிதமாக கார் லாரியின் பக்கவாட்டில் மோதி ரோட்டின் மறுபுறம் தூக்கி வீசிப்பட்டது. இதில் நாராயணசாமி, அவரது மனைவி பாக்கியலட்சுமி, டிரைவர் பாண்டியன் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சித்ராவை பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். கைக்குழந்தை பிருத்தீவ் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையும் இறந்தது. விபத்து காரணமாக திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.கிரேன் மூலம் லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி காருக்குள் சடலமாக கிடந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் எஸ்பி சோனல் சந்திரா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
No comments:
Post a Comment