கராச்சி: பாகிஸ்தானில் பேருந்தும் பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 57 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு கராச்சியிலிருந்து ஷிகர்பூர் நோக்கி விரைவு இணைப்பு சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி பேருந்தின் மீது மோதியது.
இதில் இரு வாகனங்களும் உடனடியாக தீப்பற்றியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உள்பட 57 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் கராச்சி ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று கராச்சி ஜின்னா மருத்துவமனை மருத்துவரான செமி ஜமால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மோசமான சாலை வசதிகளே இதுபோன்ற விபத்துக்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2013 –ம் ஆண்டில் 8,885 சாலை விபத்துகளில் 4672 பலியாகியுள்ளதும், 9864 பேர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment