Latest News

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை தடுப்பதற்கான 10 எளிய வழிகள்


நோய்களுக்கு பஞ்சமில்லாத இன்றைய காலகட்டத்தில், பல விதமான உடல் சுகவீனங்களுக்கு நாம் ஆளாகிறோம். இதிலே பல வகைகள் இருந்தாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சுகவீனங்கள் சில உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய மோசமான வாழ்க்கை முறை, மாசுப்பட்ட சுற்றுப்புறச் சூழல், சுகாதாரமற்ற உணவுகள் போன்றவைகளே. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளில் ஒன்று தான் நெஞ்செரிச்சலும் அசிடிட்டியும்.

அசிடிட்டியை மருத்துவ உலகில் காஸ்ட்ரோ-ஈசோஃபேகியல் ரிஃப்லக்ஸ் டிசீஸ் (GERD) என அழைக்கின்றனர். நெஞ்செரிச்சலும் அசிடிட்டியும் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளே. ஏற்கனவே கூறியதை போல் இதற்கு காரணமாக இருப்பதும் ஆரோக்கியமற்ற உணவருந்தும் பழக்கம் மற்றும் காரசாரமான ஜங்க் உணவுகளை உண்ணுவதே. வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று போக்கு போன்றவற்றால் அவதிப்படும் அனைவருமே உடனடி தீர்வைப் பெற சில அமில முறிவு பொருளை உட்கொண்டிருப்பார்கள்.

இந்த அமில முறிவு பொருட்கள் (அன்டாசிட்ஸ்) ஒரு மணிநேரத்திற்குள் நிவாரணத்தை அளித்தாலும் கூட, இவைகளால் உங்கள் செரிமான அமைப்பில், நீண்ட கால அடிப்படையில், சில எதிர்மறையான தாக்கங்களும் ஏற்படும். அதனால் அதற்கு பதிலாக, கீழ்கூறிய 10 மாற்றங்களை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் கொண்டு வந்தால், மீண்டும் மீண்டும் ஏற்படும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ஆரோக்கியமாக உண்ணுதல்
நீங்கள் அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உண்ணும் உணவுகளில் சிலவற்றை நிறுத்த வேண்டும். காரசாரமான உணவுகளான சமோசா, பர்கர், சிப்ஸ் போன்றவைகளையும் இனிப்பு வகை உணவுகளான சாக்லெட், டோனட்ஸ் மற்றும் கேக் போன்றவைகள் தான் அசிடிட்டி ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். உங்களுக்கு மீண்டும் மீண்டும் அசிடிட்டி ஏற்பட்டால் ஆரஞ்சு, பப்ளிமாஸ் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்க வேண்டும். அதிகளவிலான அமில அளவினால், இந்த பழங்கள் நிலைமையை இன்னமும் மோசமடைய தான் செய்யும்.

உண்ணும் பழக்கத்தை மாற்றுங்கள்
நீங்கள் உண்ணும் உணவுகளைத் தவிர, எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதும் முக்கியமாகும். நீங்கள் உண்ணும் உணவின் அளவு செரிமான செயல்முறையின் மீது வெகுவான தாக்கங்களை உண்டாக்கும். இரண்டு வேளைகளுக்கு நடுவே அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக உண்ணுவார்கள். இப்படி அதிகமாக உண்ணுவதால் செரிமான அமைப்பின் மீதான பளு அதிகரிக்கும். இதனால் அமில சுரப்பும் அதிகரிக்கும். மாறாக, சிறிய அளவில் அதிக முறை உண்ணவும் (ஒரு நாளில் 4-5 முறை).

மெதுவாக உண்ணவும்
டைஜெஸ்டிவ் டிசீஸ் வீக் 2003 இல் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, 30 நிமிடங்கள் உண்ணுபவர்களுக்கு அமில சுரப்பு 8.5 தடவை நடந்துள்ளது; அதுவே 5 நிமிடங்களில் உண்ணுபவர்களுக்கு 12.5 தடவை அமில சுரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் அதிகளவிலான உணவுகள் தேங்கும். இதனால் அளவுக்கு அதிகமான அமில உற்பத்தி ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நிறைந்த வயிறுடன் தூங்குவதை தவிர்க்கவும்
நீங்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடும் போது, சோர்வின் காரணமாக, சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்குள் தூங்கி விடுவீர்கள். கண்டிப்பாக நீங்கள் மாற்ற வேண்டிய பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தூங்கும் போது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்முறைகளும் மெதுவாக நடக்கும். இதன் காரணமாக அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவருந்த மறந்து விடாதீர்கள்.

உடல் கட்டமைப்புடன் இருங்கள்
உடல் பருமனாக இருந்தால் அதனுடன் ஏற்கனவே பல உடல் நல பிரச்சனைகள் தொடர்பில் உள்ளது. அந்த பட்டியலில் அதிகப்படியான அமில சுரப்பும் முக்கியமான ஒன்றாகும். ஒல்லியாக அல்லது சரியான கட்டுக்கோப்புடன் இருக்கும் பெண்களை விட, குண்டாக இருக்கும் பெண்களுக்கு அமில சுரப்பு தொடர்ச்சியாக 2-3 முறை அதிகமாகவே ஏற்படுகிறது என நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தன் ஆய்வில் வெளியிட்டிருந்தது.

தண்ணீர் குடிப்பதை அதிகரியுங்கள்
அமில சுரப்பிற்கு சிறந்த தீர்வாக இருப்பது தண்ணீர். இது அசிடிட்டியை நிறுத்துவதோடு மட்டுமல்லாது செரிமானத்திற்கும் உதவிடும். மேலும் பல விதமான உடல்நல பயன்களையும் கொண்டுள்ளது. அசிடிட்டியை போக்கும் மருந்துகளை விட தண்ணீர் சிறப்பாக செயல்படும் என ஜர்னல் டைஜெஸ்டிவ் டிசீசஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது. அதில் பங்கு பெற்றவர்களில், தண்ணீர் குடித்தவர்களுக்கு ஒரு நிமிடத்தில் காஸ்ட்ரிக் pH (4-க்கும் மேலான) அதிகமானதை காட்டியது. இதுவே அசிடிட்டியை போக்கும் மருந்துகளை உட்கொண்டவர்கள் தண்ணீர் குடித்தவர்களின் நிலையை அடைய 2 மணிநேரத்திற்கும் அதிகமானது.

டீ மற்றும் காபியை தவிர்க்கவும்
காப்ஃபைன் கலந்துள்ள பானங்களான டீ, காபி, கோலா போன்றவைகள் அசிடிட்டியை தூண்டிவிடும். காபி அல்லது காப்ஃபைன் கலந்த பானங்கள் காஸ்ட்ரிக் pH அளவை மாற்றி அதிகப்படியான அமில சுரப்பை உண்டாக்கும் என்பதற்கு குறிப்பிடும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட, GERD-க்கு முதல் சிகிச்சையாக நோயாளிகளை காப்ஃபைன் கலந்த பானங்களை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் காபி குடிப்பது உங்கள் நிலையை மோசமடையச் செய்தால், அதை குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

மதுபானம் உட்கொள்ளும் அளவை குறைத்திடவும்
மதுபானம் குடிப்பதற்கும் GERD-க்கும் இடையே தொடர்பு உள்ளது என பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. மதுபானம் பருகும் போது காஸ்ட்ரிக் சவ்வு நேரடியாக பாதிக்கப்படும். மேலும் உணவுக்குழாய் சுருக்குத் தசையை தளர்த்தும். இதனால் உணவுக் குழாய்களுக்குள் அமிலம் நுழைந்துவிடும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்
அசிடிட்டி உள்ளவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானால், அவர்களின் நிலை இன்னும் மோசமடையும். நீங்கள் பிடிக்கும் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் வயிற்றில் உள்ள உட்பூச்சில் எரிச்சலை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் போது உணவுக்குழாய் சுருக்குத்தசை தளர்ந்து, அமில உற்பத்தி தூண்டப்படும்.

தூங்கும் நிலையை மாற்றுங்கள்
தலையை உயர்த்தி தூங்கினால் இரவு நேரத்தில் அசிடிட்டிக்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தலையை உயர்த்திய நிலையில் தூங்கினால் அமிலம் வேகமாக நீங்கும் (67%) என ஆய்வுகள் காட்டியுள்ளது. அமில நீக்கம் என்பது உணவுக்குழாயில் இருந்து வயிற்று அமிலத்தை நீக்குவது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.