Latest News

தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது - வைகோ


பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும், மாண்புமிகு எல்.கே. அத்வானி அவர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழி நடத்திச் சென்ற காலத்தில், தோழமைக் கட்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த அணுகுமுறையின் அடையாளம் எதுவும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அரசில் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொலைகார சிங்கள அரசை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ள வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியைத் தொடர முடியாது; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் விலகிக் கொள்கின்றது என்றும் அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய தீர்மானங்கள் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் இடம் பெற்றுத் தேர்தலைச் சந்தித்தது. மத்தியில் அக்கூட்டணி அரசு அமைந்தபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகம் அமைச்சரவையில் சேரவில்லை. ஆட்சி அமைந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே, இலங்கை அரசோடு இந்திய அரசு இராணுவ ஒப்பந்தம் செய்ய முற்பட்டபோது, தொடக்கத்திலேயே அதனைக் கடுமையாக எதிர்த்து, கழகத்தின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அப்போதைய இராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து, இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வது மிகப்பெரிய தவறாகவும், வரலாற்றுப் பிழையாகவும், விபரீத முடிவாகவும் அமையும் என்று பலத்த எதிர்ப்பைத் தெரிவித்ததால், அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.

ஆனால், இரகசியமாகவும், மறைமுகமாகவும் ஒப்பந்தத்தின் உள்ளீடான நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து, காரண காரிய விளக்கங்களுடன் ஆட்சேபணைக் கடிதங்கள் எழுதியும், இலங்கையில் தமிழ் இனப் படுகொலை நடத்தும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது; வேறு எந்த உதவிகளும் செய்யக் கூடாது என்று தெரிவித்தும்கூட, இராஜபக்சேயின் கொடிய இனவாத அரசுக்கு இராணுவ ரீதியிலான அனைத்து உதவிகளையும் செய்தது. தமிழ்க்குலத்துக்கு எதிராக துரோகச் செயல் புரிந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அக்கூட்டணியில் இருந்து விலகியது. 2006 ஜூலைக்குப் பின்னர், இந்திய அரசு முழு வேகத்தில் சிங்கள அரசோடு கைகோத்துக் கொண்டு ஈழத்தமிழ் இனக்கொலை நடைபெற, நேரடியாகவே அனைத்து இராணுவ உதவிகளையும் செய்தது.

 இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இரகசியமாகப் பலமுறை அனுப்பி வைத்து, விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் புலிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்திடவும், சிங்களர்கள் வெற்றி பெற்றிடவும், அந்தப் போரை இந்தியா பின்னணியில் இருந்து நடத்துகிறது என்கிற உண்மையை, இராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அமைச்சர்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பகிரங்கமாகவே அறிவித்தனர். இந்தப் போரில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உட்பட இரண்டு லட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கோரமாகக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளுக்குக் கூட்டுக் குற்றவாளியாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2009 மே இறுதியில் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற முழுமூச்சாகச் செயல்பட்டது. கொலைகார இராஜபக்சேயை இந்தியாவிற்கு நான்கு முறை அழைத்து வந்து, சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துப் பாராட்டிய கொடும் துரோகத்தைச் செய்தது. இராஜபக்சே வருகையை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் அகில இந்தியாவே உற்று நோக்கும் விதத்தில் மாபெரும் அறப்போராட்டங்களை நடத்தியது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கின்ற மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்த இராஜபக்சேயை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் 1200 தோழர்கள் தமிழகத்தில் இருந்து 25 பேருந்துகளில் சென்று, விந்திய மலைச்சரிவில் உள்ள பட்சி சோலை என்ற இடத்தில் காவல்துறையினரும், துணை இராணுவத்தினரும் தடுத்ததை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலையை மறித்து, வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தை மூன்று நாட்கள் நடத்தினர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். இனி இராஜபக்சே என்றைக்கு இந்தியாவில் நுழைந்தாலும் அதை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் அறப்போராட்டம் நடத்தும் என்று பொதுச்செயலாளர் வைகோ அங்கே பிரகடனம் செய்தார். மீண்டும் இராஜபக்சே இந்தியப் பிரதமரைச் சந்திக்க புது டெல்லிக்கு வருவதாக அறிந்தவுடன், பொதுச்செயலாளர் வைகோ, கழகத் தோழர்களுடன் டெல்லிக்குச் சென்று, பிரதமர் இல்லத்தை முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தியதால், இராஜபக்சே தில்லிக்கு வராமல் திரும்பிச் சென்றான். தமிழ் ஈழத்தில் ஏறத்தாழ 2000 இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கிய சிங்கள வெறிக்கூட்டத்திற்குத் தலைவனான இராஜபக்சே, திருப்பதி கோவிலுக்கு வந்தபோதும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள். இனி, இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு அமைய வேண்டும்; ஈழத்தமிழர்களுக்குச் செய்கின்ற துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே அமையப் போகின்ற மத்திய அரசு மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.கழகம் தீர்மானித்தது. இந்தச் சூழ்நிலையில்,பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் திரு பொன்.இராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் திரு மோகன்ராஜூலு ஆகியோர் சந்தித்துக் கூட்டணி அமைக்க விரும்பி பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர். அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் அவர்களும் வைகோ அவர்களைச் சந்தித்தார். மூன்று மணி நேரம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 1998 இல் இருந்து 2004 வரை பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் சிங்கள அரசுக்குத் துளியும் உதவுவது இல்லை என்று முடிவு எடுத்துச் செயல்படுத்தினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சிங்கள அரசுக்கு ஆயுதங்களை விற்பனை கூடச் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்து அறிவித்தார். பன்னாட்டுக் கடல் பரப்பில் விடுதலைப்புலிகளுக்காகச் செல்லும் கப்பல்களை இந்தியக் கடற்படை தடுப்பது இல்லை என்ற துணிச்சலான முடிவையும் மேற்கொண்டார். வாஜ்பாய் அவர்கள் காலத்தில் நடந்ததைவிட நூறு மடங்கு சிங்கள இராணுவத் தாக்குதல்களால் ஈழத்தமிழ் இனம் பெரும் அழிவைச் சந்தித்துள்ள நிலையில், அமையப் போகும் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஈழப்பிரச்சினையில் வாஜ்பாய் அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாட்டையே செயல்படுத்திட வேண்டும் என்று, மறுமலர்சசி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, திரு முரளிதர்ராவ் அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தலைவர் திரு ராஜ்நாத் சிங் அவர்களைத் டெல்லியில் சந்தித்தபோதும், இதனையே வைகோ வலியுறுத்திக் கூறினார். அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் இடம் பெற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திரு நரேந்திர மோடி அவர்களை, அவர் தங்கி இருந்த இடத்தில் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினையில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு கையாண்ட அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல், அதனை ஏற்றுக் கொள்கின்ற வகையிலேயே வைகோ அவர்களுடன் திரு நரேந்திர மோடி உரையாடினார். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. 2014 மே 19 அன்று டெல்லியில் உள்ள குஜராத் பவனத்தில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திரு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார். 2014 மே 26 இல் நடைபெறும் பிற்பகலில், திரு நரேந்திர மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, சிங்கள அதிபர் இராஜபக்சே அழைக்கப்பட்டு இருக்கின்றார் என்று மே 21 ஆம் நாள் அறிந்தவுடன், அதிர்ச்சியில் பதறித் துடித்த வைகோ அவர்கள் அதை எதிர்த்ததுடன், மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு இராஜபக்சேயின் வருகையைத் தவிர்க்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். அத்துடன், அதற்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதத்தை எழுதி, தொலைநகலில் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வைகோ அனுப்பி வைத்தார். 2014 மே 23 அன்று, குஜராத் பவனத்தில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவருடன் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் திரு கணேசமூர்த்தி அவர்களும் உடன் இருந்தார். அந்தச் சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் இன்றையத் தலைவர் திரு அமித் ஷா, இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரும் உடன் இருந்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழாவில், தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்சே பங்கேற்பது, தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நெருப்பைப் கொட்டுவதாகவே அமையும்; எனவே, இராஜபக்சே தில்லிக்கு வந்தால் அதை எதிர்த்து அறப்போர் நடத்துவோம் என்ற திரு நரேந்திர மோடி அவர்களிடம் வைகோ தெரிவித்து, 40 நிமிடங்கள் விளக்கங்களை எடுத்து உரைத்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்து, 2014 மே 26 அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்றபோது, தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரே, வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கைது செய்யப்பட்டு, நாடாளுமன்றக் காவல் நிலையத்திற்குள் அடைக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற இராணுவ ஆலோசனை மாநாட்டில், பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட இருவர், அந்தக் கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் நச்சுக்கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தியாவின் கடற்படைத் தளபதி கொழும்புக்குச் சென்று தமிழ் இனக் கொலைகாரன் இராஜபக்சேயைச் சந்தித்து, ‘உங்களிடம் இருந்துதான் இந்திய இராணுவம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று இந்தியாவுக்கு அவமானத்தைத் தேடித்தரும் விதத்தில் கூறினார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று, மேலும் ஓர் அக்கிரமம் நடந்தது. தமிழ் இனக் கொலைகாரன் இராஜபக்சேவுக்கு, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டிய ஒரு கொடியவனுக்கு, இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த சதிகாரர்களுள் ஒருவனான, பாரதிய ஜனதா கட்சிக்குள் நுழைந்த புல்லுருவி தந்த அறிக்கைக்கு, பாரதிய ஜனதாவின் தலைமை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. தமிழ் இனத்திற்கு பாரதிய ஜனதா அரசு செய்யும் துரோகங்களின் உச்சகட்டமாக, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு நகரில், 26.11.2014 இல் நடைபெற்ற சார்க் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாட்டில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கையில் நடைபெற இருக்கின்ற அதிபர் தேர்தலில் மகிந்த இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வாழ்த்திய செயல், 1947 இல் இருந்து இந்தியப் பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதும், தவறானதும் ஆகும். ‘இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க முடிவு எடுத்ததால்தான் சிங்கள அதிபரையும் அழைத்தோம்' என்று அந்தக் கேடான செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு, தமிழர்களின் மான உணர்வைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில், தமிழகத்தின் எல்லையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு கொலைபாதகன் ராஜபக்சே, 2014 டிசம்பர் 9 ஆம் நாள் வருவதற்கு ஏற்பாடு செய்து இருப்பது, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் புரிந்த தமிழ் இனத்தைக் கிள்ளுக்கீரையாக நினைக்கின்ற ஆணவப் போக்கு ஆகும். தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் புறக்கணிப்பு ‘இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் விதத்தில் மத்திய அரசு கொலைகார சிங்கள அரசை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை எத்தனையோ ஆதாரங்களுடன் மறுமலர்ச்சி தி.மு.கழகம் விளக்கமாக எடுத்துக் கூறிய பின்னரும், 2015 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், சிங்கள அரசுக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள செய்தி, தமிழர்கள் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பதாகும். சமஸ்கிருதம் திணிப்பு இந்திய விடுதலைக்கு முன்பே, 1937 ஆம் ஆண்டில் இருந்து இந்தித் திணிப்பையும், இந்தி ஆதிக்கத்தையும் தமிழகம் எதிர்த்துப் போராடி வந்துள்ளது. அதற்காக எத்தனையோ தமிழர்கள் மகத்தான உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்தியப் பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், ‘இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது; ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்கும்' என்று வாக்குறுதி அளித்து இருக்கின்றார். அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்; முதல் கட்டமாக, உலகின் மூத்த முதன்மையான, தொன்மையான தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும்; ஆங்கிலமும் நீடிக்க வேண்டும் என்பதுதான், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மொழிக்கொள்கை ஆகும். இதுவே பேரறிஞர் அண்ணா வகுத்த கொள்கையும் ஆகும். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களை, பல்வேறு மொழிகளை, பல்வேறு பண்பாடு பழக்கவழக்கங்கள் சமய நம்பிக்கைகளைக் கொண்டுள்ள ஒரு துணைக்கண்டம் ஆகும். அதன் நம்பகத்தன்மைக்கும், தேசிய இனங்களின் தனித்துவத்திற்கும் கேடு நேர்ந்தால், அந்தப் போக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும். ஆனால், பாரதிய ஜனதா கட்சி, விரல் விட்டு எண்ணக்கூடிய, ஒரு சில ஆயிரம் பேர்கள் மட்டுமே அறிந்துள்ள, வழக்கில் இருந்து ஒழிந்துபோன வடமொழியாம் சமற்கிருதத்தை, அனைத்து இந்திய மொழிகளின் தாய்மொழி என்று கூறி, கல்வித்துறையில் சமற்கிருதத்தைப் புகுத்தும் தீய நோக்கத்துடன் செயல்படுகிறது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அவர்கள், டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிப்பவர்கள் மட்டுமே இராமனின் பிள்ளைகள்; மற்றவர்கள் எல்லாம், தவறான, முறைகேடான வழியில் பிறந்தவர்கள்' என்று விடத்தைக் கக்கி உள்ளார். இந்துத்துவா என்னும் ஆபத்தான கூடாரத்தில் இருந்து கருக்கொண்டதுதான் இத்தகைய நச்சுக் கருத்து ஆகும். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்குப் பேராபத்தை உருவாக்கும் விதத்தில் கேரள அரசு முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நல்லாறு, இடமலையாறு பிரச்சினையிலும், நெய்யாறு இடதுகரைக் கால்வாய் பிரச்சினையிலும், செண்பகவல்லி தடுப்பு அணை பிரச்சினையிலும், அமராவதி பிரச்சினையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2000 டி.எம்.சி. தண்ணீர் கேரள மாநிலத்தின் வழியாகக் கடலில் கலந்து வீணாகின்ற நிலையிலும், தமிழகத்திற்குத்துளி நீரும் தர மாட்டோம் எனக்கூறிய முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் நியாயப்படுத்த முடியாத வெறுப்பு உணர்வுடன் செயல்படுவதோடு, சகோதரர்களாக நாம் கருதும் கேரள மக்கள் மனதிலும் தமிழகத்திற்கு எதிரான வெறுப்பை விதைத்து வருகின்றனர். 1886 ஆம் ஆண்டில் அன்றைய திருவிதாங்கூர் அரசோடு சென்னை இராஜதானி அரசு செய்து கொண்ட முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தத்தின்படி, 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு தண்ணீர் உரிமையைத் தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு உரிமையான 8531 ஏக்கர் நிலப்பரப்பில் முல்லைப்பெரியாறு தண்ணீர் தேக்கப்படும் நிலத்தில் 5100 ஏக்கர் நிலத்தில் கேரளத்தின் முதலாளிகளும், பெருவணிகர்களும், சுற்றுலா கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைள் கட்டி எழுப்பி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். முல்லைப்பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீர் தேக்கப்பட்டால், சட்டவிரோதமாக இக்கட்டடங்களைக் கட்டியவர்களின் அநியாய இலாபத்திற்கு வழி இல்லாமல் போகும் என்பதால், கேரளத்தின் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஆபத்து என்று, பொய்யான பூச்சாண்டி காட்டும் வேலையைச் செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரையிலும், சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டபின், 152 அடி வரையிலும், தண்ணீரைத் தேக்கிக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி முழு உரிமையும் அதிகாரமும் உண்டு என்று 2006 பிப்ரவரி 27 இல், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வும், பின்னர் 2014 மே 7 ஆம் தேதிஅன்று, உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி லோதா அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வும் ஆணித்தரமான தீர்ப்பை வழங்கியதோடு, கேரள அரசு 2006 மார்ச் 16 இல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்றும், கேரள அரசின் கன்னத்தில் அறைந்தாற்போலத் தீர்ப்புகள் வழங்கின. பச்சை துரோகம் இத்தனைக்குப் பின்னரும், இன்றைய நரேந்திர மோடி அரசு, முல்லைப்பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசின் வன உயிரியல் துறை அனுமதி அளித்து இருப்பது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானது மட்டும் அல்ல, நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம் ஆகும். கொங்கு மண்டலத்தில் 85 இலட்சம் மக்களுக்குக் குடிதண்ணீர் ஆதாரமாகவும், 60,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி நதிக்கு வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்த, கேரளத்தில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டு, மத்திய அரசின் அனுமதியைப் பெறாமலேயே கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தி, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மத்திய அரசு அதைத் தடுப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் எதிர்கால வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், அனைத்துலகச் சட்டங்கள், நெறிகளுக்கு முற்றிலும் புறம்பாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, கர்நாடக அரசு செயல்பட்டு, தமிழகத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் அக்கிரமம் புரிகின்றது. காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைக்கு எதிராக, புதிதாக பதினோரு இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி செய்திடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் இரண்டு அணைகள் கட்டப் போவதாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. இந்த அநீதி நடக்குமானால், தமிழகத்தின் 12 மாவட்டங்கள், சென்னை உட்பட ஐந்து கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்காது; மூன்று கோடி மக்கள் விவசாயம் செய்ய முடியாது. பல்லாண்டுகளாகக் காவிரியால் வளம் கொழித்த தமிழகம், பஞ்சப் பிரதேசமாக பாலைவனமாக மாறும் பேரபாயம், தலைக்கு மேல் கொடுவாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கின்றது. இப்போது ஒகேனக்கல் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கர்நாடக முதல்வர் ஆணவத்தோடு கொக்கரிக்கின்றார். கர்நாடகத்தின் இந்த அநீதியான போக்கைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் திரு நரேந்திர மோடியின் அரசு முனையவே இல்லை. கச்சத்தீவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தின் உரிமை பூமியான கச்சத்தீவை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்குக் காங்கிரஸ் அரசு 1974 இல் தாரை வார்த்துக் கொடுத்தது. இதன் விளைவாகவே, தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய உரிமையான மீன்பிடித் தொழிலை, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மேற்கொள்ள இயலாமல் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், கச்சத்தீவு முடிந்து போன பிரச்சினை என்றும், அதில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் மதுரை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இருப்பது, மேலும் ஓர் துரோகம் ஆகும். தமிழக மீனவர்கள் பிரச்சினை தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயே சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீனவர்களின் வலைகளை அறுத்துப் படகுகளை உடைத்து நொறுக்குவதும், பன்னாட்டுக் கடல் பரப்பில் அவர்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கின்றது. இதுவரை தமிழக மீனவர்கள் 578 பேர் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். இத்தாலிய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு கேரள மீனவர்களின் குடும்பங்களுக்குத் தந்ததுபோல, தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு எந்தவிதமான நட்ட ஈடும் தரப்படவில்லை. பாரதிய ஜனதா அரசு, கொலைகார சிங்கள அரசோடு கூடிக் குலாவி வருவதால், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அப்பாவிகளான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து, அவர்களை இராஜபக்சே மன்னித்து விடுதலை செய்வது போல ஒரு கபட நாடகத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படை கைது செய்து, போதைப் பொருள்களைக் கடத்தினார்கள் என்று பொய் வழக்குப் போட்டு, அவர்களை அடித்துச் சித்திரவதை செய்து, சிறையில் அடைத்த குற்றத்திற்கு, இராஜபக்சே அரசுக்கு என்ன தண்டனை? 2011ஆம் ஆண்டில், அதே தங்கச்சி மடத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் விக்டர், அந்தோணிராஜ், ஜான் பால், மாரிமுத்து ஆகியோரைச் சிங்களக் கடற்படை வெட்டிப் படுகொலை செய்த குற்றத்திற்கு, எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த கொடும்பாவி இராஜபக்சே அரசுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்திய அரசு ஐந்து மீனவர்கள் பிரச்சினையைக் கையாண்டது, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட திட்டமிட்ட நாடகம் ஆகும். இந்தியத் தொழில்கள் நசிவு பொருளாதார, தொழில் வணிகத்துறையில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டுவதற்கு இடம் கொடுக்காமல், இந்தியாவின் கனரக, சிறுதொழில் துறையை ஊக்குவிக்கவும், தற்சார்பு நிலையை உறுதிப்படுத்தவும் செயல்படுவோம் என்று கூறி வந்த பாரதிய ஜனதா கட்சி, 2014 மே மாதத்தில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அரசுப் பொறுப்பு ஏற்றபின், வேளாண்மைத் துறையில் மரபு அணு மாற்றப் பயிர்களை அனுமதிக்கவும், வணிகத்துறையில் சிறுகடை உரிமையாளர்களை நசுக்கவும், காப்பீடு, இராணுவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆக்டோபஸ் கரங்களால் இந்திய மக்களின் தொழில்களை நசுக்கி கொள்ளை இலாபம் காணவும் எல்லா ஏற்பாடுகளையும் வேகமாகச் செய்து வருகின்றது. பழைய அணுகுமுறை இல்லை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும், மாண்புமிகு எல்.கே. அத்வானி அவர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழி நடத்திச் சென்ற காலத்தில், தோழமைக் கட்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த அணுகுமுறையின் அடையாளம் எதுவும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அரசில் இல்லை. எனவே, நடந்து முடிந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த மறுமலர்ச்சி தி.மு.கழகம், இனியும் பாரதிய ஜனதா கட்சியுடன் உடன்பாட்டையே, உறவையோ தொடர முடியாது என்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது. விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டி காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்காமல் செய்யத் திட்டமிட்டு வரும் கர்நாடக மாநில அரசின் முயற்சிகளை முறியடிக்கவும், காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையிலும் மக்கள் சக்தியைத் திரட்டியாக வேண்டும். காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்து உள்ளன. விவசாய நிலங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைத்து மீத்தேன் எரிவாயு உறிஞ்சப்படுமானால், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து கடல்நீர் உள்ளே புகுந்து விடும். இதனால் நிலத்தடி நீர் பாழாகி விவசாயத் தொழிலே அழியும் நிலை உருவாகும். சோழ வள நாட்டின் வேளாண்மைத் தொழிலை அழிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். மதுவின் கோரப்பிடி தமிழ்நாட்டை நாசப்படுத்தி வரும் மதுவின் கோரப் பிடியில் இருந்து மீட்டு தமிழகத்தில் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்தும இலக்கை அடைவதற்கு, தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். எனவே, மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், டிசம்பர் 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரையில் தஞ்சை மண்டலத்தில் மேற்கொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது. வைகோ பொதுவாழ்வு பொன்விழா மாநாடு! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கின்றது. 1964-ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி மாணவராக இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் மாணவர் படைத் தளகர்த்தராக வீறுகொண்டு பணியாற்றிய வைகோ அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையை ஏற்றுக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்வீரர் ஆனார். 1964-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 50 ஆண்டுகள் பொது வாழ்வில் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்தும், நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் இடம் பெற்றும் திராவிட இயக்கம் மற்றும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். 1994 மே 6-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்முதல், கடந்த 21 ஆண்டுகளாகத் தமிழ் மொழி, இன, பண்பாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் நதிநீர் உரிமைகளை நிலைநாட்டவும் போராடி வருகின்றார். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 5,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு, தென்னக நதிகளை இணைக்கவும், சாதி மத பூசலற்ற தமிழகத்தை உருவாக்கி தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், மதுவின் கோரப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டு இருக்கின்ற தமிழ்நாட்டை மீட்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனைச் சரித்திரம் படைத்தார். அஞ்சாத சிறைவாசம் தாம் ஏற்றுக் கொண்ட இலட்சியங்களுக்காக இடர் எதுவரினும் இன்முகம் காட்டி, அடக்குமுறை, அஞ்ஞாத சிறைவாசம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, எங்கெல்லாம் தமிழர் நலன் கெடுகின்றதோ அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்து, தமிழ்த் தேசிய இனத்தின் தலைவராக உலகத் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்று இருக்கின்றார். சிங்கள இனவாத அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆளாகி, தாய் மண்ணிலேயே வாழும் உரிமையற்று வாடிக் கிடக்கும் தொப்புள்கொடி உறவுகளான தமிழ் ஈழ மக்களின் தோன்றாத் துணைவராக, உலகில் தமிழர்களுக்கென்று ஒரு தாயகமாகத் ‘தமிழ் ஈழம்' மலர்ந்திட அயர்வு இன்றி உழைக்கின்றார். சென்னையில் பொன்விழா மாநாடு திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளில் பற்றும் உறுதியும் கொண்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஏற்றி வைத்த கொள்கைச் சுடரை அணையாமல் பாதுகாத்து வரும் தன்னிகர் இல்லாத அரும்பெரும் தலைவர் வைகோ அவர்களின் பொது வாழ்வுப் பொன்விழா மாநாட்டை (1964-2014) நாடு போற்றிடும் வகையில் சீருடனும் சிறப்புடனும் கொண்டாட வேண்டும். தனது பிறந்தநாளுக்கு விழா எடுக்க தலைவர் வைகோ அவர்கள் இதுவரை இசைந்தது இல்லை என்றாலும், கழகம் எடுக்கும் பொது வாழ்வு பொன்விழா மாநாடு மூலம் திராவிட இயக்கம் வலிவும் பொலிவும் பெறும் என்பது திண்ணம். வரலாற்றுச் சிறப்புமிக்க வைகோவின் பொது வாழ்வுப் பொன்விழா மாநாட்டை 2015, மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தலைநகர் சென்னையில் நடத்திடவும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை வாழ்த்துவதற்கு இந்தியத் திருநாட்டின் மதிப்புறு தலைவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், தமிழ்கூறும் நல்லுலகு போற்றும் பெருமக்கள் மற்றும் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் அழைத்து, தமிழக வரலாறு கண்டிராத வகையில் வெற்றிகரமாக நடத்துவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.