கிறிஸ்துமஸை முன்னிட்டு மத நல்லிணக்க பேரணி சேலத்தில் நடைபெற்றது. இந்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் கிறிஸ்துவ ஐக்கியத்தின் சார்பில் மத நல்லிணக்க பேரணி இன்று நடைபெற்றது. சேலம் செவ்வாய்பேட்டை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி அலுவலகம், வள்ளுவர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் முடிவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியபடி, சாண்டகிளாஸ் குல்லாவை அணிந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேலும் இந்த பேரணியில் ஏசு கிறிஸ்துவின் வரலாற்றை குறிக்கும் அலங்கார வாகனங்களும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து போஸ் மைதானத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மேயர் சவுண்டப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் உறுப்பினர்கள், இஸ்லாமிய சகோதரர்கள், பிரம்ம குமாரிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட திருச்சபைகளின் உறுப்பினர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் ஆராதனை பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment