மத்திய ஆட்சியதிகாரத்திற்கு பாஜக வந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனநாயகத்திற்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுகின்றன என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். இதைத் தடுக்கிற பெரும் பொறுப்பு இடதுசாரி இயக்கங்களின் தோளில் விழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 21-வது மாநாடு விழுப்புரத்தில் தோழர் என். வரதராஜன் நினைவரங்கத்தில் திங்களன்று (டிச.29) எழுச்சியுடன் துவங்கியது. சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி மாநாட்டுக்கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.
மாநாட்டுத் தலைமைக் குழுவாக வீ. இராதாகிருஷ்ணன், ஏ. சங்கரன், வே. உமாமகேஸ்வரி, எம். செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கே. கலியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஜி. துரை வரவேற்றார்.மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:வாஜ்பாய், மதன் மோகன் மாளவிகாவுக்கு பாரத ரத்னா வழங்குவது, வல்லபாய் பட்டேலை உயர்த்திப் பிடிப்பது, நேருவை தரம் தாழ்த்தி விமர்சிப்பது போன்றவற்றில் மறைமுகமாகவும், சாதி வேறுபாட்டை தூக்கிப் பிடிக்கும் பகவத் கீதையை புனிதநூலாக அறிவிப்பது, பாஜகவினர் அல்லாத மற்றவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்ற மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியின் பேச்சு, கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினமாகக் கொண்டாட அறிவிப்பு, கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை, முற்போக்கான நாவல்கள், திரைப்படங்களை தடை செய்ய வற்புறுத்துவது போன்ற நேரடியான மதவெறி நடவடிக்கைகளில் பெரும்பான்மை பலத்தோடு நரேந்திர மோடி பிரதமரானவுடன் துணிச்சலாக ஈடுபட்டு வருகின்றனர். சாதி, மதவெறி எதிர்ப்பு நடவடிக்கைகளை திராவிட இயக்கங்கள் கைவிட்டுவிட்டன. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து அயராது போராடுகிற கடமையை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே நிறைவேற்றுகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியை உருவாக்குவதே இத்தகைய மோசமான நிலைகளை தடுப்பதற்கு அவசியமானதாகும். சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த “கம்யூனிசம், சோசலிசம் இந்திய நிலைமைக்கு பொருந்துமா” என்ற விவாதத்தில் நடந்த வாக்கெடுப்பில் 58 விழுக்காடு பேர் சாத்தியமே என்று வாக்களித்துள்ளனர். இது நம்முடைய இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும் 100 நாட்களுக்கு குறையாமல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை அமலாக்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை 2014-2015 ஆம் ஆண்டிற்கு ரூ. 4,000 என அறிவிக்க வேண்டும். 2013-2014 ஆண்டிற்கு மாநில அரசு அறிவித்த விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பாக்கித் தொகை 62 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.தொடர்ந்து மாவட்டச் செயலாளர் த.ஏழுமலை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். அரசுப்போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு கட்சியின் ஆதரவை வெளிப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
டிசம்பர் 31 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் நிறைவு நாளில் பேரணி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இப்பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே. கனகராஜ், என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment