ஆவின் பால் விலை தனியார் பாலின் விலையை விட அதிகமில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியதாவது:
"ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பால் கொள்முதல் விலையானது கேரளம், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையங்கள், தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பால் பண்ணைகள் ஆகியவற்றின் கொள்முதல் விலையைவிட குறைவானதாக இருந்தது.
இதனால், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு படிப்படியாக குறைந்து 2014 அக்டோபரில் 20.70 லட்சம் லிட்டர் ஆனது.
இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூ.5-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.4-ம் நவம்பர் 1-இல் உயர்த்தப்பட்டது.
இந்தக் கொள்முதல் விலை உயர்வின் காரணமாக, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொள்முதல் தொகை ஆண்டுக்கு சுமார் ரூ.456 கோடி அதிகரித்து, ரூ.2,550 கோடி என்ற அளவுக்கு உயர்ந்து கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, உற்பத்தியாளர்கள் ஆவின் கூட்டுறவு நிறுவனத்துக்கு பால் வழங்குவது தற்போது 25 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
தனியார் பால் விலை அதிகம்: பால் விலை உயர்த்தப்பட்ட பின்னரும், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய விலை, தனியார் பால் நிறுவனங்கள், இதர மாநிலங்களின் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றின் பால் விற்பனை விலையைவிடக் குறைவானதாகும்.
ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் வழங்கி வருகிறது.
எஞ்சிய தொகை பாலை பதப்படுத்துவதற்கும், போக்குவரத்துச் செலவுக்கும் பணியாளர்கள் ஊதியத்துக்கும் செலவு செய்யப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவிப்பவர்களைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன். ஆவின் நிறுவனத்தை மூட வேண்டுமா? தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியபோதெல்லாம், யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? ஆவின் நிறுவனத்துக்குப் போதிய பால் கிடைக்காமல் இந்த நிறுவனம் மூடப்பட்டு தனியார் ஏகபோகத்தில் பால் விற்பனை இருக்க வேண்டும் என்று கருதுகின்றனரா?
அல்லது பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை வழங்கக் கூடாது எனக் கருதுகிறார்களா எனத் தெரியவில்லை.
இவற்றையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், நுகர்வோருக்கான பால் விற்பனை விலை அதற்கேற்ப உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது." என்று முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது தொடர்பாக திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஆர்.சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment