நாட்டில் வாழும் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருமே ராமரின் பிள்ளைகள்.. இதை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் சாத்வி ஜோதி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகளே, கிறிஸ்துவர், முஸ்லிம்களும் கூட ராமரின் பிள்ளைகள் தான்.
இந்தியாவில் இருந்து யார் ஒருவர் வெளிநாடு சென்றாலும் நாம் அனைவரும் இந்துஸ்தானி என்று தான் சொல்கிறோம். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். டெல்லியில் வரும் காலத்தில் ராமரின் மகன் ஒருவரே ஆட்சி செய்ய போகிறார் என்று பேசினார். மத்திய அமைச்சர் சாத்வியின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. இதனைத் தொடர்ந்து லோக்சபா, ராஜ்யசபாவில் பேசிய அமைச்சர் சாத்வி, நான் யாரையும் புண்படுத்தும் விதமாக பேசவில்லை. யாரையும்
காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்றார். ஆனாலும் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. சாத்வி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; சாத்வி மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். ராஜ்யசபாவில் இது குறித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அமைச்சர் வருத்தம்
தெரிவித்துவிட்டதால் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதேபோல் முன்னதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் மத்திய அமைச்சர் சாத்வியிடம் அவரது பேச்சு குறித்து விளக்கம் கேட்டோம். அவர் வருத்தம் தெரிவித்தார் என்று கூறியிருந்தார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment