மத்திய அரசின் மருந்து விலை நிர்ணய கெடுபிடிகள் காரணமாக, புதிய மருந்துகளை தயாரிக்க மருந்து நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் புதிய மருந்துகள் தயாரிப்பது 80 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு கொ ண்டு வரவேண்டும் என்று கடந்த 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகளை பட்டியலிட்டு அவற்றுக்கு விலை கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகுதான், எந்தெந்த மருந்துகளை விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் 348 மருந்துகள் மட்டுமே இடம்பெற்றன. சில தினங்களுக்கு முன்பு மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் பேசுகையில், ‘உயிர்காக்கும் மற்றும் முக்கிய மருந்துகள் என்ற வகையில் 440 மருந்துகள் ஏற்ªகனவே விலை கட்டுப்பாட்டு பட்டியலில் இருக்கிறது.
இத்துடன் மேலும் 175 மருந்துகள் இந்த பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது‘ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், விலை குறைப்பு செய்யப்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக சிறு மாற்றங்களை செய்து புதிய மருந்தாக விலை அதிகம் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதற்கு மருந்து நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், புதிய மருந்துகள் தயாரித்து அறிமுகப்படுத்துவது குறைந்து வருவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் 270 புதிய மருந்துகள் விற்பனைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளன. 2009ல் 217 மருந்துகள், 2010ல் 224 மருந்துகள் 2011ல் 140 மருந்துகள் அனுமதி பெற்றுள்ளன. 2012ல் 44ஆகவும், 2013ல் 35ஆகவும் குறைந்து விட்டது.
2014ம் ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை 56 புதிய மருந்துகள் மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளன என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மருந்து விற்பனை நடக்கிறது. இருப்பினும் மருந்து விலையில் கட்டுப்பாடு கொண்டுவரப் பட்ட பிறகு பல வெளி நாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் புதிய மருந்துகளை சந்தைப்படுத்துவதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. விலை கட்டுப்பாடு காரணமாக லாபம் குறைவதே இதற்கு காரணம் என மருந்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருந்து விலை கட்டுப்பாட்டை குறை கூறும் சில மருந்து நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் அதே மருந்தை குறைந்த விலைக்கு விற்பது சாத்தியமாகும்போது இவர்களால் ஏன் முடியாது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
மாற்றங்கள் இருந்தாலும் கட்டுப்பாடு
சில மருந்து நிறுவனங்கள் தனது பழைய மருந்துகளில் வீரியத்தை அதிகரிக்கவோ அல்லது நோயின் தன்மைக்கேற்ப புதிய மருந்துகளை சேர்த்து மாற்றம் செய்தாலோ, அதை சந்தைக்கு அனுப்புவதற்கு முன்பே அத்தியாவசிய மருந்துகளின்படி விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மருந்து நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரித்த மருந்து அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்தாலும், அதே திறனையொத்த வேறு மருந்துகள் பட்டியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது ஏற்கெனவே இருந்த மருந்து கலவையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் போன்றவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு முன்பாக மருந்துவிலை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதியுடன் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment