சிங்கப்பூர்: மாயமான சிங்கப்பூர் பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தோனேசியாவின் பெலிடங் தீவு அருகே மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விமானம் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விமானம் பத்திரமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை உறுதியாக நம்பப்படுகிறது. மாயமான விமானத்தில், மொத்தம் நான்கரை மணி நேரம் வரை பறப்பதற்குத் தேவையான எரிபொருள்தான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானம் காணாமல் போய் தற்போது 6 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. எனவே விமானம் தற்போது பறந்து கொண்டிருப்பதாக நம்ப முடியாது.
இந்தோனேசியாவில் இருந்து இன்று காலை 155 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் திடீரென நடுவானில் மாயமானது. அதன் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படையும் களமிறக்கப்பட்டது. தற்போது இந்த விமானம் பெலிடங் தீவிலிருந்து 80 முதல் 100 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது. விமானம் அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது வானிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விமானம் அக்கடல் பகுதியில் மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிக்க திசை மாறிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே வானிலை காரணமாக விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த விமானத்தில் மொத்தம் 162 பேர் இருந்துள்ளனர். அதில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஆவர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.47 மணியுடன் விமானத்திற்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு விமான்ம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த விமானத்தில் இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment