Latest News

தொடக்கம்... இன்று முதல் பழைய ரேஷன் கார்டுகளில் புதிய உள்தாள் ஒட்டும் பணி!


தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் புதிய உள்தாள் ஒட்டும் பணி இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு கடையிலும் ஒரு நாளைக்கு 300 கார்டுகளுக்கு தாள் ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் சுழற்சி முறையில் கார்டுகளுக்கு தாள் ஒட்டப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு புதிய ரேஷன் அட்டைகள் தரப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு, ஒவ்வொரு வருடமும் கால அளவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மாதத்தோடு, இந்தாண்டு ரேஷன் அட்டைகளின் கால அளவு முடிகிறது. எனவே உள்தாள் ஒட்டி அதன் கால அளவு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்தநிலையில் ரேஷன் கார்டுகளில் அடுத்த வருடத்திற்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் எல்லா ரேஷன் கடைகளிலும் நடக்க இருக்கிறது. இதுகுறித்து தமிழக உணவு வழங்கல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளில் 2015-ம் வருடத்திற்கான உள்தாள் அச்சடிக்கப்பட்டு, கடந்த 12-ந் தேதியன்றே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. உள்தாள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கும் பயனாளிகள் நேரில் சென்று தங்களது ரேஷன் கார்டுகளுக்கான உள்தாள் ஒட்டிக்கொள்ளலாம்.

முதல் நாளான இன்று 200 முதல் 300 அட்டைகளுக்கு மட்டும் உள்தாள் ஒட்டப்படும். அடுத்தடுத்த நாட்களில், நாளுக்கு 300 ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள்கள் ஒட்டப்படும். எந்த பொருளும் வேண்டாம் என்ற "என்" கார்டு வைத்திருப்பவர்களுக்கு, ஆன்லைன் மூலம் புதுப்பிக்கப்படும். ஒரு வார காலகட்டத்திற்கு மட்டும் உள்தாள் ஒட்டும் பணி சுழற்சி முறையில் நடைபெறும். அதன்பிறகு வரும் நாட்களில் வழக்கம்போலவே பயனாளிகளுக்கு உள்தாள் வழங்கப்படும். அதேவேளையில் பொருட்கள் வாங்க வரும் பயனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழக்கம்போல பாதிப்பில்லாமல் வழங்கப்படும். இந்த மாத இறுதி வரையில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறும். எனவே பயனாளிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று உள்தாளினை ஒட்டிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.