Latest News

வீட்டுக்கடனை திருப்பி செலுத்தும்போது கவனியுங்கள்


வீட்டுக்கடன் வழங்குவதற்கு அனைத்து தரப்பு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தாராளமய கொள்கையை கடைபிடிப்பதால் கடன் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சுலபமாக வீட்டுக்கடனை பெறலாம். எனினும் வீட்டுக்கடனை பெறும்போதும், திருப்பி செலுத்தும்போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய மாத வருமானத்தை கணக்கிட்டே வீட்டுக்கடன் தொகை கிடைக்கும்.

திருப்பி செலுத்தும் காலம்

அத்துடன் திருப்பிச் செலுத்தும் அளவுகோலாக வாங்கும் சம்பளத்தில் 50 சதவிகித தொகையை வங்கிகள் நிர்ணயிக்கும். அதை கருத்தில் கொண்டு வீட்டுக்கடனை திருப்பி செலுத்தும் கால அளவை நிர்ணயிக்க வேண்டும். இதர கடன்கள் எதுவும் இருந்தால் அந்த கடன்களை முடித்துவிடுவதுதான் மாதத்தவணை தொகையை (இ.எம்.ஐ) செலுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

பொதுவாக வீட்டுக்கடனை விரைவாக முடிப்பதற்கே அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே அதிக தொகையை திருப்பி செலுத்துவது அதற்கு காரணமாக இருக்கும். அதனால் 30 வருட காலத்தில் செலுத்துவதாக வாங்கி இருக்கும் வீட்டுக்கடனை கூட 10 ஆண்டுக்குள் செலுத்தி முடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

வட்டி குறைப்பு

அது ஆதாயம் தரும் விஷயமாக இருக்கும். எனினும் முதலில் வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அது நாம் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கிறதா? என்பது பற்றியது. ஏனெனில் வருமானத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்பவே கடன் வழங்கப்படும் நிலையில் பலருக்கு போதுமானதாக தொகை கிடைக்காமல் போய்விடுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். அதன் மூலம் கூடுதல் தொகையை கடனாக பெற முடியும். அப்படி கடன் பெறுவதால் வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் கால அளவு அதிகரிக்கும். அதனால் வட்டித்தொகை அதிகரிக்குமே என்ற கவலை எழலாம். வட்டிக்கு செல்லும் தொகையை குறைக்கவும் வழிவகை இருக்கிறது. மாதத்தவணை தொகை செலுத்தி வரும் காலக்கட்டத்தில் கூடுதல் வருமானம் வரும் பட்சத்தில் அந்த தொகையை கடனை முடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

முதலீடு திட்டங்கள்

முக்கியமாக போனஸ், பாலிசி முதிர்வு மூலம் கிடைக்கும் தொகையை மொத்தமாக செலுத்தும்போது கடன் தொகை அளவு குறையும். அத்துடன் வீட்டில் உள்ளவர்களின் வருமானத்தையும் கடனை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது அவர்களின் வருமானத்தின் ஒருபகுதியை மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது லாபத்தை கொடுக்கும்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் முதலீடு திட்டங்களும் இருக்கின்றன. அந்த திட்டங்களின் மூலமாக குறிப்பிட்ட தொகையை குறுகிய காலத்தில் பெற்று வீட்டுக்கடனை அடைப்பதற்கு பயன்படுத்தலாம். எனினும் அத்தகைய முதலீடு திட்டங்கள் ‘ரிஸ்க்’ எடுக்கும் வகையில் இருக்கும். அதை கவனித்து செயல்படுவது லாபம் தருவதாக அமையும்.

வட்டி விகித மாறுபாடு

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டுக்கடனுக்கான வட்டி குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் மாறுபடும் வட்டி விகிதத்தை (புளோட்டிங்) தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். வட்டி விகிதம் குறைக்கப்படும்போது அதற்கு ஏற்ப வட்டித்தொகையும் குறையும்.

அதைவிடுத்து நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கினால் குறிப்பிட்ட சில ஆண்டுகள் ஒரே வட்டி விகிதத்தில்தான் கடனை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் மாறுபடும் வட்டிவிகிதத்தில் கடன் பெறுவதே கடனை திருப்பி செலுத்துவதற்கு சாதகமாக அமையும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.