திட்டமிட்டு, சதி செய்து, கொள்ளைக் கும்பல் ஒன்று நடத்திய திருட்டு வேட்டையை, 72 மணி நேர அதிரடி வேட்டையில் நகைகளுடன் பிடித்துள்ளது துபாய் போலீஸ். இது குறித்து துபாய் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் நகைக் கடை வைத்திருக்கும் செல்வந்தர், தனது தாய்நாட்டிற்குச்(துபாய்) சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு ஏரளமான நகைகளை வாங்கிக் கொள்ள தாம் தயாராகவும், இது குறித்து மேலும் விளக்கமாக டீல் பேச பிரான்ஸின் பேரிஸ் நகரிற்க்கு அழைப்பு விடுத்தும் ஒரு போன் கால் வந்துள்ளது. பேசியவர், மிகவும் தத்ரூபமாகவும், நம்பும் படியாகவும் பேசியதால், நகைக் கடை செல்வந்தரும் அதனை உண்மை என நம்பியுள்ளார்.
இதனால், செல்வந்தர் பாரிஸ் சென்று தனக்கு போன் செய்த குறிப்பிட்ட நபரைச் சந்தித்து டீல் பேசி முடித்துள்ளார். இறுதியாக டீலிங் பேசிய நபர், தனக்கு தேவையான நகைகளை தனது சார்பாக துபாயில் உள்ள தன் பணியாள் வாங்கிக் கொள்வதாகவும், கூறியுள்ளார். செல்வந்தரும், கடையில் உள்ள தன் ஆட்களிடம் கூறி, நகைகளை எடுத்து பேக் செய்து தயார் நிலையில் வைக்கச் சொல்லி இருக்கிறார்.
அதிக படியான நகைகள் என்பதால் நகைகளை மதிப்பிட, டீலர் சார்பில் கிரிஸ்டோபர் என்ற நபர் கடந்த 9ம் தேதி அந்தக் கடைக்கு வந்துள்ளார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்த அவர் முடிவில் கடந்த 11ம் தேதி, 6.5 கிலோ மதிப்பிலான பிரேஸ்லெட்டுகள், மோதிரங்கள், காதணிகள் என நிறைய நகைகளை தேர்ந்தெடுத்துள்ளார்.
தேர்ந்தெடுத்த நகைகளை ஒரு சூட் கேசில் போட்டு பேக் செய்து விட்டு, பணம் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்வதாக கடையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பாரிஸில் இருந்த நகைக் கடைக்காரரை டீலர் தன் ஹோட்டல் ரூமுக்கு அழைத்துள்ளார். கடைக்காரரும் தன் மகனுடன் ஹோட்டலுக்குச் செல்ல, திடீரென டீலரும் அவரது ஆட்களும் அவரை தாக்கியுள்ளனர்.
இதன் பிறகு தான் இந்த டீல் டிராமாவே, கொள்ளை கும்பலின் வேலை என்பது நகைக் கடைக் காரருக்கு தெரியவந்துள்ளது. கடையிலுள்ள, பேக் செய்த நகைகளை பில்லுடன் எடுத்துச் செல்ல தன் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார் டீலர். நகைக் கடைக் காரரும் தன் கடைக்கு போன் செய்து, கிரிஸ்டோபரிடம் நகைகளை கொடுக்கலாம் என்றும் தான் பணம் வாங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
துபாயில் உள்ள நகைக் கடையில் திட்டமிட்டபடி, கிரிஸ்டோபர் சார்பாக டென்னிஸ் என்ற அடியாள் சென்று நகை சூட் கேஸை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டான். தயக்கத்துடன் 12 மணி நேரம் கழித்து பிரான்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம் துபாயில் இருக்கும் தன் கடை ஊழியர்களை உஷார் படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்குள்ளாக டென்னிஸ் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டான் இதன் பின் தான் துபாய் போலீஸ் தன் வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே 12 மணி நேரங்கள் கடந்திருந்தாலும், கொள்ளை கேசை 72 மணி நேரங்களுக்குள் அந்த கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளது துபாய் போலீஸ்.
அவர்கள் நகைகளுடன் வெளிநாட்டுக்கு தப்பிபதற்கு அல்லது நகைகளை கடத்துவதற்கு முன்பாக, அவர்களை பிடிக்க வேண்டும் என்று தனிப்படை அமைத்து திட்டமிட்டது துபாய் போலீஸ். முதலில் சந்தேக நபர்களது வசிப்பிடங்களை கண்டுபிடித்து தேடுதல் வேட்டை நடத்தியதில், துபாயில் ஜுமேரியா லேக் டவர்(Jumeirah Lakes Towers) என்ற இடத்தில் நகைகளை மதிப்பிட வந்த கிரிஸ்டோபர் என்பவர் சிக்கியுள்ளார்.
இவரிடம் இருந்து கொஞ்சம் நகைகள் கிடைத்துள்ளன. இவரிடமிருந்து கிடைத்த தகவல்களை வைத்து டென்னிஸையும் அவரது கூட்டாளியையும் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர் துபாய் போலீசார்.
சிக்கியவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் படி, திருடிய நகைகளுடன் வெளி நாட்டிற்குச் சென்று வெவ்வேறு பெண்களுடன் பங்கு போட்டுக் கொள்ள இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் வெளி நாட்டில் இருப்பதாகவும், அவரை பிடிப்பதற்கான முயற்ச்சியில் இண்டர்போல் உடன் இணைந்து அந்தப் பெண்ணை பிடிக்க முயற்ச்சிகள் எடுத்து வருவதாகவும் துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment