ஜனதாதளத்தில் இருந்து பிரிந்த 6 கட்சிகள் ஒன்றாக இணைய முடிவு செய்துள்ளன. இதற்கான நடைமுறை பணிகளை மேற்கொள்ள முலாயம்சிங்குக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
முலாயம்சிங் வீட்டில் ஆலோசனை
ஜனதாதளம் கட்சியில் இருந்து சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாடி ஜனதா ஆகிய கட்சிகள் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சமீபகாலமாக இந்த கட்சிகளின் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள். பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மேற்கண்ட 6 கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவின் டெல்லி வீட்டில் நடைபெற்றது. லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), சரத் யாதவ், நிதிஷ் குமார் (இருவரும் ஐக்கிய ஜனதாதளம்), தேவே கவுடா (மதச்சார்பற்ற ஜனதாதளம்), துஷ்யந்த் சவுதாலா (லோக்தளம்), கமல் மொரார்கா (சமாஜ்வாடி ஜனதா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில், 6 கட்சிகளும் ஒன்றாக இணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதிகாரம்
இதுகுறித்து, கூட்டம் முடிவடைந்த பிறகு, ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான நிதிஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
எங்கள் அனைவருக்கும் ஒரே கொள்கை, கோட்பாடுதான். எனவே, ஒரே கட்சியாக இணைய வேண்டும் என்று அனைவரும் கருதினோம். இந்த இணைப்பு குறித்த நடைமுறை பணிகளை மேற்கொள்ள சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்குக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
22–ந்தேதி தர்ணா
பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். டெல்லியில், 22–ந்தேதி தர்ணா போராட்டம் நடத்துவோம்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை தருவதாக பா.ஜனதா கூறியது. ஆனால், என்ன நடந்தது? வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியதும் நடக்கவில்லை. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் கண்டித்து இந்த தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி மீதான அச்சத்தில், நாங்கள் ஒன்றாக இணைவதாக கருதக்கூடாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஒரே போராட்ட களத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இடதுசாரி கூட்டணி போன்ற பிற கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம். அதற்காக அக்கட்சிகளை அணுகுவோம்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
டெல்லியில் போட்டியா?
‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரே கட்சியாக போட்டியிடுவீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘நாங்கள் தேசிய அரசியலில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். எந்த குறிப்பிட்ட மாநிலத்தை பற்றியும் ஆலோசனை நடத்தவில்லை’ என்று நிதிஷ் குமார் கூறினார்.
No comments:
Post a Comment