Latest News

14 ஆண்டுகள் உண்ணாவிரதம்: விடுதலை ஆவாரா இரும்புபெண்?


14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரின் ‘இரும்புப்பெண்’ என்று அழைக்கப்படும் ஐரோம் சானு ஷர்மிளா என்பவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளி நீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் விமான நிலையம் அருகே கடந்த 2000ம் ஆண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 10 அப்பாவி பொதுமக்களை அசாம் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அப்பாவி மக்களை விசாரணை இன்றி சுட்டுக்கொல்லும் வகையில் ராணுவத்தினருக்கு தனி அதிகாரம் வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோம் ஷர்மிளா என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாடடி அவரை கைது செய்த பொலிசார் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு மருத்துவமனையில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் அவர் 14 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார், இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

இருப்பினும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.

மனித உரிமை போராளிகளுக்கான குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருது உள்ளிட்ட பல விருதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு முறை விடுதலையாவதும், பின்னர் மீண்டும் உண்ணாவிரதம் நடத்துவதும், மீண்டும் பொலிசார் கைது செய்வதுமாக சட்டத்துக்கும் போராட்டத்துக்கும் இடையே நடைபெறும் கண்ணாமூச்சி ஆட்டமாக சமூகப்போராளி ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை இருந்து வருகின்றது.

இந்திய தண்டனைச்சட்டம் 309-ன் கீழ் உண்ணாவிரதம் இருப்பது அல்லது வேறெந்த வகையிலாவது தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது.

இதே சட்டத்தின்கீழ் 14 தற்கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 14 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இந்திய தண்டனைச்சட்டம் 309-ஐ விரைவில் மத்திய அரசு ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.