Latest News

இந்த சிறுவனின் அபார கண்டுபிடிப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது !!


என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலையும் வீட்டு வேலையும் செய்றவங்க. சில சமயம் அம்மாகூட போவேன்.அப்போ, அம்மா ஒட்டடை அடிக்கிறதுக்கு படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கேன்.

ஸ்கூலில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியை அறிவிச்சப்போ, ‘ஆட்டோமேட்டிக் ஒட்டடை மெஷின் கண்டுபிடிக்கணும்’னு முடிவு செய்தேன். அதுதான இந்தப் பரிசை வாங்கிக்கொடுத்திருக்கு” என்று உற்சாகமாகச் சொல்கிறார் யோகேஷ்.

தேனி மாவட்டம், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப் பள்ளி யில் 8-ம் வகுப்புப் படிக்கிறார் யோகேஷ். ‘நகரும் தானியங்கி ஒட்டடை இயந்திரம்’ கண்டுபிடித்து, மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

இந்தத் தானியங்கி ஒட்டடை இயந்திரம், நீண்ட பைப்பில் சிறிய மின்மோட்டார் பொருந்தியது. அதை இயக்கியதும் நாடா மூலம் மேல் பகுதியில் இருக்கும் உருளை இயங்குகிறது. அங்கே இருக்கும் பிரஷ், ஒட்டடை அடிக்கிறது. தரையில் நின்ற இடத்திலேயே உயரத்தில் இருக்கும் ஒட்டடையை நீக்கலாம்.

தேனி மாவட்டத்தில், 183 பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றிபெற்று, மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றார் யோகேஷ். ‘‘800 பள்ளிகள் கலந்துகொண்ட மாநில அளவிலான போட்டியில், தங்கப் பதக்கம் கிடைச்சது. அதன் மூலம் டெல்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சிக்குத் தேர்வானேன். அங்கே பரிசு கிடைக்கவில்லை என்றாலும், ‘தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் இருந்து தலைநகர் வரைக்கும் போய் வந்திருக்கேன். அடுத்த முறை நிச்சயம் பரிசு கிடைக்கும்’னு நிறையப் பேர் பாராட்டினாங்க” என்ற யோகேஷ் குரலில் சந்தோஷமும் வெட்கமும் மின்னியது.

தானியங்கி ஒட்டடை அடிக்கும் இயந்திரம் தவிர, ‘நடக்கும் அதிர்வின் மூலம் கிடைக்கும் மின்சாரம்’ என்கிற கருவியையும் கண்டுபிடித்திருக்கிறார் யோகேஷ். வீட்டுக்குள் வரும் வெப்பதைக் குறைக்கவும் யோசனை சொல்கிறார்.

‘‘நம் பாதம் தரையில் படும்போது ஏற்படும் அழுத்தத்தைக்கொண்டு, ‘பீசோ எலெக்ட்ரிக்’ என்ற விளைவின் மூலம் மின்சாரம் கிடைக்கச் செய்யலாம். வேங்கை மரம், நாட்டுக் கருவேல மரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசின், மரவள்ளிக்கிழங்கு மாவு கலந்து, வீட்டின் மேல் பகுதியில் இடும்போது, புறஊதாக்கதிர்களைத் தடுத்து, சூரிய ஒளியினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கலாம்” என்கிறார், இந்த வில்லேஜ் விஞ்ஞானி.

நன்றி;சுட்டி விகடன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.