ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அவருக்கு தண்டனையாக ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கூட்டுச் சதி வழக்கில் தனியாக ஜெயலலிதாவுக்கு மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரின் தகுதி இழப்புக்கு அரசியல் சட்டம் வகை செய்கிறது. தண்டிக்கப்பட்டதால் செப்டம்பர் 27ம் திகதி முதலே எம்எல்ஏ என்ற தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டார்.
முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்த அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
தொகுதி காலியாக இருக்கிறது என அறிவிக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனும் சட்டமன்றச் செயலகத்திடம் கடிதம் கொடுத்தார்.
தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமாரும் சட்டமன்றத்தில் இருந்து தகவல் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டினார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குப் போட தி.மு.க தயாரான நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று கடந்த 8ம் திகதி தான் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தற்போது, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் நேற்று தான் வெளியிடப்பட்டது.
அதில், லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப் பட்ட 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி முதல், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார்.
தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 வருடங்களுக்கும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.
எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27ம் திகதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment