பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அப்பள்ளியின் முன்பாக ஆயிரக்கணக்கான பெற்றோர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பள்ளியின் இந்தி ஆசிரியர் ஜெய்சங்கர்(40) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் முன்பாக நேற்று ஆயிரக்கணக்கான பெற்றோர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பெங் களூரில் பெரும்பாலான பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
சிறுமியை பலாத்காரம் செய்த ஜெய்சங்கரை பொலிசார் பெங்களூர் மாநகர 10-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் ஜெய்சங்கருக்கு 4 நாட்கள் பொலிஸ் காவலில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் பெங்களூரில் தொடரும் பாலியல் குற்றங்கள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தகைய குற்றங்களுக்கு பள்ளி நிர்வாகமே முழு காரணம். அவர்கள்தான் இதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் இதனை மதிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய விவகாரத்தில் பொலிசாரையும், அரசையும் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. அனைத்து சம்பவங்களும் பள்ளி வளாகத்துக்குள் நடந்திருக்கிறது. இருப்பினும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த 10 மாதங்களில் பெங்களூரில் பள்ளிச் சிறுமிகள் 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment