இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் வளர்ச்சியில் முதன்மை மாநிலம் என்று சமீபத்தில் ஒரு சர்வே வெளியானது. விலைவாசி உயர்வு முதல் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்பது வரை மாநிலம் முடங்கிக் கிடக்கும் நிலையில், எதன் அடிப்படையில் அந்த சர்வே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
ஆனால் நாம் இங்கு பேச வருவது அதைப்பற்றி அல்ல. தமிழ்நாட்டுக்கு இன்னொரு பெருமை சேர்ந்திருக்கிறது. அது, நாட்டிலேயே தமிழ்நாடுதான் தற்கொலையில் முதலிடம்!
2009 ஜனவரி முதல் 2014 ஆகஸ்ட் வரையிலான சுமார் ஐந்தரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 83,103. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர். அது என்ன கிட்டத்தட்ட… நிச்சயம் தமிழ்நாட்டின் தற்கொலை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்.
கிராமப்புறங்களில் நடக்கும் தற்கொலைகளில் முக்கால்வாசி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுவது இல்லை. அது அந்தந்த கிராம வரம்புக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. இந்த புள்ளிவிவரம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடுவது. அது, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் தற்கொலை எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும்.
இதில் மேலும் ஓர் கடும் அதிர்ச்சி என்னவெனில், பதிவு செய்யப்பட்ட 83,103 தற்கொலையில் 2,449 பேர் மாணவர்கள். நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அந்த 2,449 குடும்பங்களின் பதைபதைப்பை நினைத்தால் மனதை பெரும் அச்சம் சூழ்கிறது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு என்ன பெரிய மனக்கவலை? வீடு, பள்ளி, நண்பர்கள், விளையாட்டு… என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக ஊரைச் சுற்றித் திரிய வேண்டிய வயது அது. ஆனால் யதார்த்தத்தில் அப்படியா இருக்கிறார்கள்?
இன்றைய தமிழ்நாட்டு மாணவர் ஒவ்வொருவர் மீதும் தாங்கவியலாத அழுத்தம் சுமத்தப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் கட்டிய பணம் அவர்கள் மனதில் எப்போதும் கணக்கிறது. தன்னால் படிக்க முடியாமல் போனால், நல்ல மதிப்பெண் எடுக்க முடியாமல் போனால் கட்டிய பணம் வீணாகிவிடுமே என்று பதறுகின்றனர். மேலும் தான் படிக்க முடியாமல் போவது பெற்றோர்களுக்கு அவமானம் என்றும் கருதுகின்றனர். இதனால் படிப்பில் ஒரு தோல்வி என்றால் உயிரைப் போக்கிக் கொள்ளும் விபரீத முடிவுகளை நோக்கிச் செல்கின்றனர்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் இன்றைய தலைமுறையின் மன உறுதி, உதிர்ந்துவிழும் காரைச் சுவர் போல பொலபொலவென கொட்டுகிறது. எதையும் எதிர்த்து நிற்கும், எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவு மிகவும் குறைவாக இருக்கிறது. இது மாணவர்களின் தனிப்பட்ட சிக்கல் அல்ல. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் வளர்கின்றனர்.
தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம் என்ற உண்மையை இளம் பிராயத்தில் இருந்தே உணர்த்தி வளர்க்க பெற்றோர்கள் தவறுகின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டு படித்ததை நினைத்து, தன் பிள்ளை அப்படி கஷ்டப்படக்கூடாது என்று மிகவும் சொகுசாக வளர்க்கிறார்கள்.
முந்தைய தலைமுறையில் ஒரு புதுச்சட்டை கேட்டால் அடுத்தத் தீபாவளி வரை காத்திருக்க வேண்டும். நோட்டுப் புத்தகம் கேட்டால் ஒரு மாதம் ஆகும். ஒரு சிலேட்டுக்காக ஒரு வருடம் கூட காத்திருக்கும் நிலை இருந்தது உண்டு. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு காலையில் கேட்டால் மாலை கிடைத்துவிடுகிறது. இதனால் எந்தப் பொருளின் மதிப்பும் இவர்களுக்குத் தெரிவது இல்லை.
நாம் கேட்கும் பொருளை வாங்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பது கூட அவர்களுக்குத் தெரிவது இல்லை. பெற்றோர்கள் அதை உணர்த்துவதும் இல்லை. கடைசியில் ஏதாவது ஒன்று கிடைக்காமல் போனால் எதிர்கொள்ள தடுமாறுகின்றனர். இது பெரிய மனக்கோளாறு. இதை சரிசெய்ய இளமையில் இருந்தே நமது குழந்தை வளர்க்கும் முறையை மாற்ற வேண்டும். உலகத்தை அதன் உண்மை நிறத்துடன் எதிர்கொள்ள குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.
அப்படி செய்வதுதான் எதிர்கால தற்கொலைகளை தடுக்கும்!


No comments:
Post a Comment