வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி யின் முயற்சிக்கு ஜி20 நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இரு நாள் நடந்த ஜி20 நாடுகள் மாநாட்டில், கருப்பு பணத்தை மீட்பது குறித்து மோடி வலியுறுத்தி பேசினார். மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் ஆகியோர் நேற்று கூறியதாவது:
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மோடி விளக்கினார். குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள வரி விலக்கு உள்ளிட்டவற்றில், ஒரு நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் இழப்பு ஏற்படுவதுடன், நாட்டின் பணம் கருப்பு பணமாக வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது. ஏற்கனவே நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், இவ்வாறு செய்யப்படும் முதலீடுகள், வரி தகவல் களை பகிர்ந்து கொள்வதை மேம்படுத்த வேண்டும¢. இதன் மூலம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் வளரும்.
மேலும் கருப்பு பண பதுக்கலை தடுக்கலாம். உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் கொண்டுள்ள ஜி20 அமைப்பு, இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.
மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், மோடியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. வரி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். 2015க்குள் இது இறுதி செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சுரேஷ் பிரபு, அக்பருதீன் தெரிவித்தனர்.
காந்தி சிலையை திறந்து வைத்தார்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் மகாத்மா காந்தியின் 2.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலையை மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் இயற்கையை நேசியுங்கள் என்பதை போதித்தார். தற்போது உலக நாடுகளில் உள்ள பொதுவான பிரச்னை தீவிரவாதம¢வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளே. காந்தியின் போதனைகளை இந்த உலகம் ஏற்றிருந்தால், இன்று இந்த பிரச்னைகளே இருந்திருக்காது. இந்த இரு பிரச்னைகளுக்கும் தீர்வு காண உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு மோடி பேசினார்.
சிட்னியில் இன்று… அமெரிக்காவுக்கு சென்றபோது மேடிசன் ஸ்கொயரில் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து பேசினார் மோடி. அப்போது ராக் ஸ்டார்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கு கிடைத்தது. அதேபோன்ற ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெறுகிறது. சிட்னியின் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். அதைத் தவிர மைதானத்துக்கு வெளியே மிகப் பெரிய திரையில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பாராட்டு:
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் உணவு தானியங்களை இருப்பு வைப்பது தொடர்பாக இருந்த பிரச்னைக்கு, இந்தியாவும், அமெரிக்காவும் சுமுகமாக தீர்வு கண்டன. இதற்கு ஜி20 நாடுகள் பாராட்டுகளை தெரிவித்தன. இந்த ஒப்பந்தம் மூலம் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனை வளரும் என்று மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டின் அடுத்தக் கூட்டம் துருக்கியின் அந்தால்யாவில் நடக்கும். 2016ம் ஆண்டு சீனாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


No comments:
Post a Comment