சேலத்தில் ஆசிரியையின் மகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
ஆபாச படம்
சேலத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியைக்கும், அவர் வீட்டின் அருகே வசித்த ஒரு குடும்பத்தினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நட்பின் அடிப்படையில் அந்த ஆசிரியை அந்த குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது வங்கி காசோலையை அந்த குடும்பத்தினர் வழங்கி உள்ளனர்.
அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் பணத்தை கடனாக பெற்றவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிரேம்ஆனந்த் என்ற வாலிபர் பள்ளி ஆசிரியைக்கு மின்னஞ்சலில் சில படங்களை அனுப்பினார். அதில் அந்த ஆசிரியையின் மகளை ஆபாசமாக காண்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சில படங்கள் இருந்தன.
வாலிபர் கைது
ஆசிரியையின் மகள் அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபோது அவருக்கு தெரியாமல் ஆபாசமான முறையில் பல கோணங்களில் அவரை படம் எடுத்திருப்பது தெரிந்தது. கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் அந்த படத்தை வெளியிடுவேன் என பிரேம்ஆனந்த் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுபற்றி சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து பிரேம்ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment