Latest News

இளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி?

இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை:- ரூ.20 ஆயிரம் உதவித்தொகையும், ரூ.1000 மாத ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றன.

தகுதிகள்:- கணவரை இழந்து 18 வயதில் இருந்து சுமார் 40-45 வயதுக்கு உட்பட்ட பெண்கள், இளம் விதவைகள் என்று கருதப்படுகின்றனர்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:- கணவரின் மரணச்சான்றிதழ், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட அல்லது எரியூட்டப்பட்டதற்கான சான்று, குடும்ப அட்டையின் நகல், வாரிசுச் சான்றிதழ், திருமணப் பத்திரிகை (மிகவும் இளம் வயதாக இருந்தால் மட்டும்).

குறிப்புகள்:- இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான படிவங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். விண்ணப்பத்தை சரியாக நிரப்பிய பிறகு, அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். கணவர் மரணம் அடைந்து 3 மாதங்களுக்குள் என்றால், வட்டாட்சியர் அலுவலகத்திலும், மூன்று மாதங்களுக்கு மேல் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர், கவுன்சிலர் அல்லது அரசு அலுவலர்கள் என எவரிடமும் சான்றிதழ் கையொப்பம் பெற வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பத்தை அளிப்பதற்கு முன்பாக, விண்ணப்பத்தை ஜெராக்ஸ் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் அளித்த தேதியையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான பணிகளை கவனிக்கும் வட்டாட்சியரிடம் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது தபால் பிரிவில் விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பம் அளிக்கப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு, நேரடி விசாரணைக்காக வருமாறு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து விண்ணப்பதாரருக்கு தபால் அனுப்பப்படும்.

அவர்கள் குறிப்பிட்டிருக்கிற நாள், நேரத்தில் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் நேரடி விசாரணைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலும், விண்ணப்பித்து 6 மாதங்களுக்குள் உதவித்தொகையும், ஓய்வூதியமும் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், விண்ணப்பத்தின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக கேட்கலாம்.

1 comment:

  1. இந்த உதவித் தொகை பெற்றால் அரசு வேலை கிடைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.