Latest News

ஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு!



சென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆவின் பால் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி அரசு நிர்ணயித்துள்ளது
.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது, அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கொள்முதல் விலை உயர்வு

இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும்.

விலை குறைவுதான்

விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும் போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும். பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தரமான பால்

இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

கட்டாயத்தில் அரசு

எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.இந்த விலை உயர்வுக்கு பிறகும் கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால்பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையை விட குறைவானதே ஆகும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

இதனிடையே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும்,வரவேற்பும் தெரிவித்துள்ளனர்

ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகள்

தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வு ஆவினின் நீல நிற பாக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கொழுப்பு நீக்காத மற்றும் கெட்டியான தன்மை கொண்ட இதே ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும். அதாவது நீல நிற பாக்கெட்டுகளின் விலையிலிருந்து ரூ. 3 முதல் 5 வரை அதிகமாகவே இருக்கும்.

தனியார் பால் விலை

தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தனியார் பாலின் விலையும் லிட்டருக்கு ரூ. 10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் மக்கள்

இதுவரை பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு உட்பட்டே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களிடையே சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.